வி.கே.பாண்டியன் மீதான விமர்சனம் துரதிருஷ்டவசமானது: நவீன் பட்நாயக்

வி.கே.பாண்டியன் மீதான விமர்சனம் துரதிருஷ்டவசமானது: நவீன் பட்நாயக்
Updated on
2 min read

புவனேஸ்வர்: ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு வி.கே.பாண்டியனை விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்துள்ள தோல்வியை மனதார ஏற்றுக்கொள்கிறேன். மாநில மக்களுக்கு முடிந்தவரை சிறந்த சேவைகளை நாங்கள் வழங்கினோம். இருந்தும் தோல்வி அடைந்துள்ளோம். இந்த தோல்வியை அடுத்து, வி.கே.பாண்டியன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவை துரதிருஷ்டவசமானவை. அவர் கட்சியில் சேர்ந்து எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. இந்த தேர்தலில் அவர் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை.

எனது வாரிசு யார் என்பது குறித்த கேள்வி எழும்போதெல்லாம் நான் ஒருவிஷயத்தை தெளிவாகச் சொன்னேன். எனது வாரிசு பாண்டியன் அல்ல. எனது வாரிசை ஒடிசா மக்கள் தீர்மானிப்பார்கள். இதை நான் மீண்டும் சொல்கிறேன். வி.கே.பாண்டியன் ஒரு அதிகாரியாக கடந்த 10 ஆண்டுகளாக வெவ்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இரண்டு புயல்களால் ஒடிசா பாதிக்கப்பட்டபோதும், கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டபோதும் அவர் ஆற்றிய பணிகள் மிகச் சிறப்பானவை. இத்தகைய நல்ல பணிகளுக்குப் பிறகு, அவர் ஓய்வு பெற்று எங்கள் கட்சியில் சேர்ந்து பங்காற்றினார். பணிகளை நேர்மையாகச் செய்யக் கூடியவர் அவர். அதற்காக அவர் நினைவுகூரப்பட வேண்டும்.

எனது உடல்நிலை எப்போதுமே நன்றாகவே உள்ளது. அது நன்றாகவே தொடரும் என்று நான் கூற விரும்புகிறேன். கடந்த மாதத்தின் வெயில் காலத்தில் நான் பரபரப்பாக பிரச்சாரம் செய்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். என் உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதற்கு அதுவே போதுமானது.

எங்கள் ஆட்சியிலும் கட்சியிலும் பெருமைப்படுவதற்கு நிறைய இருக்கிறது. ஜனநாயகத்தில் வெற்றி பெற முடியும் அல்லது தோல்வி அடைய முடியும். இது சகஜம். நீண்ட காலத்துக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்டதால், மக்களின் தீர்ப்பை நாம் எப்போதும் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒடிசாவின் 4.5 கோடி மக்கள் எனது குடும்பம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். என்னால் முடிந்தவரை அவர்களுக்குச் சேவை செய்வேன். ஒடிசா மக்களுக்கு நான் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எனக்கு மீண்டும் மீண்டும் ஆசிர்வாதங்களைப் பொழிந்திருக்கிறார்கள்" என தெரிவித்தார்.

147 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசாவில் 78 இடங்களை கைப்பற்றிய பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதன்மூலம், 24 ஆண்டுகால பிஜேடி ஆட்சியை அது முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. நவீன் பட்நாயக் தலைமையிலான கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், சிபிஐ (எம்) ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். ஒடிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 20 இடங்களையும் காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன. பிஜேடி ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in