

புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் இன்று நடந்தது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்கள், புதிதாக எம்பிக்களாக தேர்தெடுக்கப்பட்டவர்கள், மாநில முதல்வர்கள், பாஜக தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கவனம் ஈர்த்தவை:
> நிதிஷ் குமார் தனது பேச்சில் எதிர் கூட்டணியான இண்டியா கூட்டணியை கிண்டலடித்து பேச, மோடி உட்பட அவையில் இருந்த அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர். நிதிஷ் தனது பேச்சில், "இந்த முறை ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவார்கள். அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்ததில்லை" என்று கிடைத்த கேப்பில் இண்டியா கூட்டணியை நக்கலடித்தார்.
> மோடி பேசுகையில், "தென்னிந்தியாவில் என்டிஏ புதிய அரசியலை துவக்கியுள்ளது என்பதை இந்தத் தேர்தலில் நான் கண்டேன். கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் இப்போதுதான் புதிய ஆட்சிகள் அமைந்தன. எனினும், இந்தத் தேர்தலில் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தழுவினர். தமிழக பாஜக அணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு எம்பிக்கள் யாரும் இல்லை. ஆனால் தொண்டர்கள் பாஜக கொடியை உயர்த்தி பிடித்துள்ளனர். இன்று தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் எங்களது வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது" என்று பெருமையாக கூறினார். இதேபோல் தனது பேச்சில், பவன் கல்யாணை சுட்டிக்காட்டிய மோடி, “நீங்கள் பார்ப்பது பவன், அவரின் பெயருக்கு ஏற்றாற்போல் அவர் தென்றல் அல்ல; அவர் ஒரு புயல்" என்று பாராட்டினார்.
உத்தரப் பிரதேசத்தில் கணிசமான இடங்களில் பாஜக தோல்வியை தழுவியது. தோல்வியால் துவண்டு விடக்கூடாது என்பது போல் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்த வந்தபோது அவரை தோளில் தட்டிக்கொடுத்தார் மோடி. | வாசிக்க > “ஏழை, நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிப்பதே எங்கள் முன்னுரிமை” - பிரதமர் மோடி | என்டிஏ கூட்டத்தில் வெற்றி உரை