டெல்லிக்கு 137 கன அடி உபரி நீரை திறக்க வேண்டும்: இமாச்சல் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லிக்கு 137 கன அடி உபரி நீரை திறக்க வேண்டும்: இமாச்சல் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: தண்ணீர் பிரச்சினையை சந்திக்கும் டெல்லிக்கு, இமாச்சல அரசு உபரி நீர் 137 கனஅடியை திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை ஹரியாணா அரசு வழங்காததே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என டெல்லி அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இமாச்சல் அரசு வழங்கும் உபரி நீரை, டெல்லிக்கு ஹரியாணா அரசு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுநீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய விடுமுறைகால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இமாச்சல் அரசு உபரி நீர் 137 கன அடியை டெல்லிக்கு திறந்து விட தயாராக உள்ளது. அந்த நீர் ஹரியாணா வழியாக டெல்லி வந்து சேர்வதற்கு தேவையான வசதிகளை ஹரியாணா அரசு செய்ய வேண்டும். தண்ணீரை டெல்லி அரசு விரயம் செய்யக் கூடாது. தண்ணீர் விஷயத்தில் அரசியல் கூடாது. இந்த மனு மீதான விசாரணை வரும் 10-ம் தேதி தொடரும்’’ என்றனர்.

இதற்கு எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ள டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் ஆதிஷி, ‘‘ இதற்கு முன் இல்லாத வகையில் தண்ணீர் பிரச்சினையை டெல்லி அரசு சந்தித்துள்ளது. இந்த நேரத்தில் டெல்லி மக்களுக்கு துணை நிற்பதற்காகஉச்ச நீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு டெல்லி மக்களுக்கும் அவர்களின் உரிமைக்கும் கிடைத்த வெற்றி’’ என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in