Last Updated : 02 May, 2018 09:44 PM

 

Published : 02 May 2018 09:44 PM
Last Updated : 02 May 2018 09:44 PM

அலிகர் பல்கலை.யில் ஜின்னா பட விவகாரம்: மாணவர் மற்றும் இந்துத்துவாவினர் மோதலில் 3 பேர் படுகாயம்

உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள முகம்மது அலி ஜின்னா உருவப்படத்தினை அகற்றக் கூறி இன்று மாலை இந்துத்துவாவினர் போராட்டம் நடத்தினர். இதில், அப்பல்கலை மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

உ.பி.யில் மிகப் பழமையான மத்திய பல்கலைக்கழகமாக இருப்பது அலிகர் பல்கலை. இதன் மாணவர் பேரவைக்காக தனியாக நாடாளுமன்றத்தைப் போல் ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர் சபை கூடும் அரங்கில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, ஜாகீர் உசைன், டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி உள்ளிட்ட பல தேசியத் தலைவர்களுடன் முகம்மது அலி ஜின்னாவின் உருவப்படமும் வைக்கப்பட்டுள்ளது.

ஜின்னா, இந்தியா பிரிந்து பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தவர். அதன் முன்னாள் அதிபர் என்பதால் ஜின்னாவின் படத்தை அகற்றக் கோரிக்கை எழுந்தது. இதை உடனடியாக அகற்றுமாறு அலிகர் நகரின் பாஜக மக்களவை எம்.பி.யான சதீஷ் கவுதம், அப்பல்கலையின் துணைவேந்தரான தாரீக் மன்சூருக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு துணைவேந்தர் இன்னும் பதில் கூறாத நிலையில் அந்தப் பிரச்சினையில் கடும் சர்ச்சை உருவானது. பல்கலையில் மாணவர் பேரவையினர், காந்தியைப் போல் ஜின்னாவும் 1938 ஆம் ஆண்டு முதல் தம் கவுரவ உறுப்பினர் என்பதால் அவரது படத்தை அகற்ற முடியாது என மறுத்துவிட்டனர்.

பல்கலை நிர்வாகம் சார்பில் பேராசிரியர் ஷாபி கித்வாய் கூறும்போது, ''அலிகர் பல்கலையின் தொடக்கக் கால உறுப்பினரான ஜின்னா, 1920 ஆம் ஆண்டு முதல் அதன் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருந்தவர். இத்துடன், பல்கலைக்காக பல நன்கொடைகளையும் ஜின்னா அளித்துள்ளார். இதனால், ஜின்னாவை பேரவையின் தம் கவுரவ மாணவராக அமர்த்தியுள்ளனர். மாணவர் பேரவையின் முடிவில் பல்கலை நிர்வாகம் தலையிட முடியாது'' எனத் தெரிவித்தார்.

இதனால், பல்கலையின் முடிவை எதிர்த்து ஜின்னாவின் படத்தினை அகற்ற வேண்டும் என பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்ய பரிஷத் மற்றும் இந்து யுவ வாஹினி உள்ளிட்ட இந்துத்துவா மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர். இவர்கள் அலிகர் பல்கலை வாயில் முன்பாக ஜின்னாவின் கொடும்பாவியை கொளுத்த முயன்றனர். இதற்காக இன்று மாலை அலிகர் காவல்நிலையம் முன்பு சுமார் நூறு பேர் கூடினர். பிறகு அங்கிருந்து அலிகர் பல்கலையை நோக்கி ஊர்வலமாகக் கிளம்பினர். இதில், ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

இதனிடையில் அலிகர் பல்கலையின் முக்கிய வாசலில் உ.பி.யின் பிஏசி பட்டாலியனின் சிறப்புப் படை மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளான ஆர்.ஏ.எப் அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களை மீறி பல்கலையினுள் நுழைய முயன்றவர்களை தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதன் மீது அலிகர் சிவில் லைன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பல்கலையின் மாணவர் பேரவையினர் கும்பலாகச் சென்றனர். அப்போது வளாகத்திற்கு வெளியே வழியில் இருதரப்பினர் இடையே கைகலப்பு மற்றும் மோதல் ஏற்பட்டது.

இதில் மஷ்கூர் அகமது உஸ்மானி உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த உ.பி. போலீஸ் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டி அடித்தனர். பிறகு சிகிச்சைக்காக காயம் அடைந்த மாணவர்கள் பல்கலையில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x