ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகார வழக்கில் நிதித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகார வழக்கில் நிதித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை
Updated on
1 min read

ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் நிதித் துறையில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கட்டாயப்படுத்தி விற்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு கைமாறாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் பங்குதாரர்களாக உள்ள ஆஸ்ட்ரோ நெட்வொர்க் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து கடந்த ஆண்டு சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தர வின் அடிப்படையில், இந்த வழக்கில் சிபிஐ அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. இதற்கான ஆவணங்களை திரட்டும் பணியில் சிபிஐ மும்முரமாக ஈடுபட்டுள்ளது. ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்தம் நடந்தபோது, மத்திய நிதித் துறையின் கீழ் இயங்கும் வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரிய (எஃப்ஐபிபி) விதிகளை மீறி ஒப்புதல் வழங்கியதாக சிபிஐ-க்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அப்போது முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

“விசாரணை நடத்திய பிறகே தவறு நடந்துள்ளதா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். முதலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். பின்னர் நிதித் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய பிறகு கூடுதல் விவரங்கள் கிடைத்தால், கூடுதல் குற்றப்பத்திரிகையில் அவை சேர்க்கப்படும்” என்று சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ இதுவரை தயக்கம் காட்டி வந்தது. இதன் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு புதிதாக பொறுப்பேற்ற அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in