

லக்னோ: ரூ.1 லட்சம் பணம் பெறுவதற்கான உத்தரவாத அட்டை கேட்டு, லக்னோ காங்கிரஸ் அலுவலகத்தில் பல பெண்கள் நேற்று வரிசையில் நின்றனர். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘ வீட்டுக்கு வீடு உத்தரவாதம்’ என்ற திட்டத்தை உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கியது.
காங்கிரஸ் கட்சியின் 25 உத்தரவாதங்கள் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் 8 கோடி வீடுகளுக்கு சென்று குடும்பத் தலைவிகளிடம் உத்தரவாத அட்டைகளை காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர்.
அதில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.8,500 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
தற்போது உத்தர பிரதேசத்தில் பல இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, லக்னோவில் உள்ள பெண்கள், காங்கிரஸ் அலுவலகம் முன் நேற்று வரிசையில் நின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியினர் அளித்த உத்தரவாத அட்டையுடன் வந்திருந்து, பணம் பெறுவதற்கான வங்கி விவரங்களை அளித்தனர். காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து ரசீது பெற்றதாகவும் சில பெண்கள் கூறினர்.
பல பெண்கள் தங்களுக்கு உத்தரவாத அட்டை தரும்படி கோரினர். கடும் வெயிலை பொருட்படுத்தாமல், முஸ்லிம் பெண்கள் அதிகளவில் காங்கிரஸ் அலுவலகம் முன் திரண்டிருந்தனர். கர்நாடகாவில் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் கிரக லட்சுமி உத்தரவாத திட்டத்தை காங்கிரஸ் தொடங்கியது. இந்நிலையில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.8,500 வழங்கப்படும் என காங்கிரஸ் உத்தரவாதம் அளித்தது.
இதனால்பெங்களூருவில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்க பல பெண்கள் வரிசையில் நின்ற சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது. அதேபோல் ரூ.1 லட்சம் பெறுவதற்கான உத்தரவாத அட்டை கேட்டு,லக்னோ காங்கிரஸ் அலுவலகத்தில் பெண்கள் நேற்று வரிசையில் நின்றனர்.