

டேராடூன்: உத்தராகண்டில் மலையேற்றத் தில் ஈடுபட்ட 22 பேரில் 13 பேர் உயிரிடனும் 4 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேரை மீட்புக் குழு தேடி வருகிறது.
உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சஹஸ்த்ரா தல் மலைப்பகுதி உள்ளது. சுமார் 4,400 மீட்டர் உயரம் கொண்ட இதில் மலையேற்ற வீரர்கள் அவ்வப்போது ஏறுவது வழக்கம். அந்த வகையில், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் உள்ளூர் வழிகாட்டிகள் என மொத்தம் 22 பேர் அடங்கிய குழுவினர் கடந்த மே 29-ம் தேதி மலையேற்றத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் ஜூன் 7-ம் தேதி மலையடிவாரத்துக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், மலையேறியவர்கள் 3-ம் தேதி அடிவாரத்தை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது வானிலை மோசமடைந்ததால் 13 பேர் வழிதவறிவிட்டதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பேரிடர் மீட்புப்படை: மாவட்ட ஆட்சியர் மெஹர்பன் சிங் பிஷ்ட் உத்தரவின் பேரில் மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல்பணியில் ஈடுபட்டனர். இதனிடையே விமானப்படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர் உட்பட 3 ஹெலிகாப்டர்கள் வான் வழியாக தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதில் 11 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். 5 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் மீட்கப்பட்டு தரை வழியாக அழைத்து வரப்படுவதாகவும் மேலும் மாயமான 4 பேரை தேடி வருவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.