Last Updated : 11 Apr, 2018 08:34 AM

 

Published : 11 Apr 2018 08:34 AM
Last Updated : 11 Apr 2018 08:34 AM

11 ஆண்டுகளாக இயக்குநர் இல்லாமல் முடங்கியுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் துவங்கி 11 ஆண்டுகள் முடிந்தும் அதற்கு நிரந்தர இயக்குநர் இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த நிறுவனம் முடங்கி உள்ளது.

மத்திய அரசின் செம்மொழி பட்டியலில் 2004-ம் ஆண்டு தமிழ் மொழி இடம்பெற்ற பின் அதன் வளர்ச்சிக்காக 2007-ல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை தரமணியில் துவக்கப்பட்டது. இதை நிர்வகிக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அதற்கு ஒரு நிரந்தர இயக்குநரை நியமிக்காததால் அதில் முறையான கவனம் செலுத்தாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இறுதியில் முதன்முறையாக இயக்குநரை நியமிக்க நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஆந்திர மாநிலம் குப்பத்திலுள்ள திராவிடப் பல்கலைக்கழக பேராசிரியரான ஜி.பாலசுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டார். இவரது தெரிவுக்குழுவில் பொன்னீலன் மற்றும் தோப்பில் முகம்மது மீரான் இடம் பெற்றிருந்தனர். தேர்வுக்கு பின் பாலசுப்ரமணியத்துக்கு காவல்துறையினரின் சரிபார்த்தல் நடத்தி முடிக்கப்பட்ட போது மத்தியில் பாஜக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்தது. இதனால் இயக்குநரை நியமிப்பது தள்ளிப்போனது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய மனித வள அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “இயக்குநர் பதவியில் பாஜக அல்லது ஆர்எஸ்எஸ்-ஸை சேர்ந்தவர்களில் உகந்தவர் கிடைக்காதமையால் நியமனம் தாமதமாகிறது” என தெரிவித்தனர்.

செம்மொழி நிறுவனத்தின் ஆட்சிக்குழு தலைவராக தமிழக முதல்வர் இருக்கிறார். துணைத் தலைவராக துவக்கத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர் புரந்தேஸ்வரி அமர்த்தப்பட்டிருந்தார்.

பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோளுக்கு இணங்க துணைத் தலைவராக ஒளவை நடராசன் அமர்த்தப்பட்டார். அதன் பின்னர் வந்த பிரகாசம் என்பவரது பதவிக்காலமும் முடிந்து அந்த இடமும் காலியாக உள்ளது.

செம்மொழி ஆய்வு நிறுவனம் துவக்கப்பட்டபோது மைசூரில் உள்ள மத்திய மொழிகள் நிறுவனத்தின் தலைவராக இருந்த க.ராமசாமியிடம் இயக்குநர் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டது. அதன் பின்னர் 6 பேர் கூடுதல் பொறுப்பு வகித்தனர். தற்போது, என்ஐடி பதிவாளரான பழனிவேலுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் கூட தமிழறிஞர் இல்லை என்பதால் சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைப்பு கிடைக்காததுடன் ஆய்வுகளும் முறையாக நடைபெறாமல் உள்ளது. புதிதாக நிரப்ப வேண்டிய சுமார் 150 நிரந்தரப் பணியிடங்களில் சிலர் மட்டும் தினக்கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்களால் 11 வருடம் ஏற்பட்ட இழப்பை மீட்டெடுப்பது மிகவும் கடினம் எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x