Last Updated : 19 Apr, 2018 03:01 PM

 

Published : 19 Apr 2018 03:01 PM
Last Updated : 19 Apr 2018 03:01 PM

பெண்களுக்கு எதிரான வழக்குகளில் சிக்கிய எம்.பி., எம்எல்ஏக்கள்: முதலிடத்தில் பாஜக

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிக்கிய நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்கள் மற்றும் சட்டப்பேரவை எல்எல்ஏக்களின் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. இதில் முதலிடம் வகிக்கும் பாஜகவினர் மீது 12 வழக்குகள் பதிவாகி உள்ளன.

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய உ.பி.யின் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல், மேலும் பல அரசியல் கட்சிகளின் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் ஏற்கெனவே பதிவாகி உள்ளன. எனவே, அவற்றின் மீதான புள்ளிவிவரங்களை தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பினரால் ஆராய்ந்து இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தற்போதுள்ள 4845 எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் தம் வேட்புமனுத் தாக்கலின் போது அளித்த பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 33 சதவிகிதமாக 1580 பேர் மீது கிரிமினல் குற்றங்கள் பதிவாகி உள்ளன. இதில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 48 பேர் மீது பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த 48-ல் 3 பேர் மட்டுமே எம்.பி.க்கள், மீதம் உள்ளவர்கள் எம்எல்ஏக்களும் ஆவர். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இவர்களில் மிக அதிகமாக பாஜகவின் 12 பேர் மீது பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இரண்டாவது இடத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவினர் 7 மீது இந்த வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிந்த எம்.பி., எம்எல்ஏக்களில் மூன்றாவது இடத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் உள்ளது. இதன் 6 பேர் மீது அந்த வழக்குகள் பதிவு பெற்றுள்ளன. நான்காவதாக தெலுங்கு தேசத்தில் 5, ஐந்தாவதாக காங்கிரஸில் 5, ஆறாவதாக பிஜு ஜனதா தளத்தில் 4 எம்.பி., எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளன.

திமுகவில் இருவர்

இந்தப் பிரச்சினையில் 3 சுயேச்சைகளும் சிக்கி ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் திமுகவில் தலா இருவர் சிக்கியுள்ளனர். கடைசி ஒருவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவரும் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

மொத்த வேட்பாளர்கள் 327 பேர்

கடந்த ஐந்து வருடங்களில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட 327 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி இருந்தன. இதை நன்கு அறிந்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் அவர்கள் தேர்தலில் போட்டியிட தம் கட்சி சார்பில் வாய்ப்பளித்திருப்பதும் ஆய்வில் தெரிந்துள்ளது.

வேட்பாளர்களிலும் பாஜக முதலிடம்

இந்தப் பட்டியலிலும் முதல் இடம் பெற்ற கட்சியாக பாஜக உள்ளது. இதன் சார்பில் 47 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள் இருப்பது தெரிந்தும் அவர்களுக்கு பாஜக போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜில் 35 வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்து இரண்டாவது இடம் உள்ளது. மூன்றாவதாக காங்கிரஸ் 24 வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.

மாநில வாரியாக மகராஷ்டிரா முதலிடம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவான எம்.பி., எம்எல்ஏக்களில் மாநில வாரியாகவும் புள்ளிவிவரம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் எட்டாவது இடத்திலும் உள்ளன. மற்ற மாநிலங்கள் முறையே மேற்கு வங்கம், ஆந்திரா, ஒடிஸா, ஜார்கண்ட், உத்தராகண்ட், பிஹார், குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளா என வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x