“உங்களை வீழ்த்த முடியவில்லை!” - ராகுல் காந்தி குறித்து பிரியங்கா காந்தி பெருமிதம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில், தனது சகோதரர் ராகுல் காந்தி குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா காந்தி.

“உங்களை குறித்து யார் என்ன சொன்னாலும், என்ன செய்திருந்தாலும் களத்தில் உறுதியுடன் நீங்கள் நின்றீர்கள். எந்த மாதிரியான சிக்கலை கண்டும் நீங்கள் பின்வாங்கவில்லை. உங்களது உறுதிப்பாடு மீது பலரும் சந்தேகம் கொண்டிருந்தனர். ஆனால், நீங்கள் நம்பிக்கையை இம்மியும் இழக்கவில்லை.

பொய்களை பரப்பியபோதும் நியாயத்துக்காக நீங்கள் போராடுவதை நிறுத்தவில்லை. உங்களை வீழ்த்த வெறுப்பையும், கோபத்தையும் கட்டவிழ்த்தனர். அது நாள்தோறும் உங்களை நோக்கி வந்தது. ஆனால், அதனால், உங்களை வீழ்த்த முடியவில்லை. நீங்கள் அதனை அனுமதிக்கவில்லை.

நெஞ்சம் முழுவதும் நிறைந்த அன்பு, உண்மை மற்றும் கருணையுடன் போராடினீர்கள். உங்களது நெஞ்சுறுதியை எங்களில் சிலர் பார்த்திருக்கிறோம். இப்போது அதனை அறியாதவர்களும் பார்த்துள்ளார்கள்” என்று அந்த பதிவில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இதோடு ‘ராகுல் காந்தி, உங்களது சகோதரி நான் என்பதில் பெருமை கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். கார்ட்டூன் படம் ஒன்றையும் அவர் இணைத்துள்ளார். அதில் கையில் பலூன்களுடன் ராகுல் நிற்கிறார். எதிர்திசையில் ஊடகம், அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் எதிர்க்கட்சியினர் நிற்கின்றனர்.

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார். அவர் செல்லும் இடமெல்லாம் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் மட்டுமல்லாது மக்கள் சிலரும் ஆதரவு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in