Published : 05 Jun 2024 07:26 AM
Last Updated : 05 Jun 2024 07:26 AM
புதுடெல்லி: ராகுல் காந்தியை ‘பப்பு’ என்றுகிண்டல் செய்வதை பிரமதர் மோடியும் பாஜக தலைவர்களும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். பப்பு என்று அழைப்பதன் வழியே ராகுல் காந்தி அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர் என்ற பிம்பத்தை அவர்கள் ஏற்படுத்த முயன்றனர்.
இந்நிலையில், நடந்த முடிந்தமக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வென்றதன் மூலம், தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு, ராகுல் காந்தி பதில் கொடுத்துள்ளார்.
2014, 2019 இரு மக்களவைத் தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த நிலையில், காங்கிரஸால் இனியொரு தேர்தலில் மோடியை எதிர்த்து வெல்ல முடியுமா என்றசந்தேகம் பரவலாக உருவானது.இதனிடையே காங்கிரஸின் தேசியத் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினார். மல்லிகார்ஜுன கார்கே தலைவராக நியமிக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு, பாஜகவுக்கு எதிரான செயல்பாட்டில் ராகுல் காந்தி தன்னை தீவிரமாக ஈடுபடுத்த ஆரம்பித்தார். இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்று தேசிய அளவில் பயணம் மேற்கொண்டு நாட்டு மக்களை சந்தித்து ராகுல் உரையாடினார்.
ரயில் நிலையங்களில் சுமை தூக்குபவர்கள், லாரி ஓட்டுநர்கள் என சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விளிம்பு நிலையில் உள்ள மக்களைச் சந்தித்து ராகுல் காந்தி உரையாடியது கவனம் ஈர்த்தது. ராகுல் காந்திக்கு பக்கபலமாக அவரது சகோதரி பிரியங்கா காந்தி செயல்பட்டார்.
இந்தத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் போட்டியிடவில்லை. “நாங்கள் இருவரும் போட்டிக் களத்தில் இருந்தால், எங்களால் மற்றத் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்படக்கூடும். எனவே, நான் போட்டியிடவில்லை” என்று அவர் அறிவித்தார்.
ராகுலும் பிரியங்காவும் மேற்கொண்ட பிரச்சாரங்கள் பெரும் கவனம் பெற்றன. மோடி ராமர் கோயிலை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், ராகுலும் பிரியங்காவும் நாட்டின் வேலைவாய்ப்பு, பெண்களின் முன்னேற்றம் சார்ந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கடந்த முறை அமேதியில் போட்டியிட்ட ராகுல், ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். இம்முறை ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் வென்றுள்ளார்.
இந்தத் தேர்தல் காங்கிரஸ்தலைமையிலான இண்டியா கூட்டணி 230 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது. காங்கிரஸ் மட்டும்தனித்து 95 இடங்களுக்கு மேல்கைப்பற்றியுள்ளது. 2019-ம் ஆண்டுமக்களவைத் தேர்தலை ஒப்பிட காங்கிரஸுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT