

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி சார்பில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஸ்ரேயஸ் படேலை காட்டிலும் 43,756 வாக்குகளில் அவர் பின்னிலையில் உள்ளார்.
பல பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாயின. அவர் மீது பெண்கள் சிலர் காவல் துறையில் புகார் அளித்தனர். அதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அண்மையில் நாடு திரும்பிய அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த சூழலில் அவர் போட்டியிட்ட ஹாசன் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மொத்தம் 6.26 லட்சம் வாக்குகளை அவர் இதுவரை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஸ் படேல் 6.70 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார். ஆபாச வீடியோ வழக்கில் சிறையில் உள்ள அவரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 16 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி 2 இடங்களிலும் தற்போது முன்னிலை வகிக்கின்றன. பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை கர்நாடகாவில் தேர்தல் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.