Published : 04 Jun 2024 09:59 AM
Last Updated : 04 Jun 2024 09:59 AM

ஆந்திராவில் அமைச்சர் ரோஜா பின்னடைவு

ரோஜா | கோப்புப்படம்

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கியது. தொடக்கம் முதலே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கூட்டணி 90 சதவீதம் முன்னிலை பெற்றது. இதன் தோழமை கட்சிகளான பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளன.

காலை 9.30 நிலவரப்படி ஆந்திர மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு தெலுங்கு தேசம் கூட்டணி 104 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. மக்களவை தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை ஆந்திராவில் தெலுங்கு தேசம் 12 தொகுதிகளிலும் பாஜக 4 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. சுற்றுலா துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா நகரி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பானுபிரகாஷ் சுமார் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். இதேபோன்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா இந்துபூர் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மங்களகிரி தொகுதியில் முன்னிலையில் உள்ளார். ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் பிட்டாபுரம் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். ஜெகன் கட்சியை சேர்ந்த பல அமைச்சர்கள் அவரவர் தொகுதிகளில் பின்னடவை சந்தித்து வருகின்றனர்.

இதேபோன்று தெலங்கானா மாநில மக்களவை தொகுதியில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இக்கட்சி மொத்தமுள்ள 17 தொகுதிகளில் 9 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும், தற்போதையை எம்பியுமான அசதுத்தீன் ஓவைஸி, அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மாதவி லதாவை விட பின்தங்கி உள்ளார். இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x