மக்களவைத் தேர்தல் களத்தில் 8,360 சுயேட்சைகள்: நாட்டிலேயே கரூரில் அதிகபட்சமாக 46 பேர் போட்டி!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இன்று முடிவுகள் வெளியாகும் மக்களவை தேர்தலில் சுமார் 8,360 சுயேட்சைகளும் அதில், கரூரில் 46 பேரும் போட்டியிட்டுள்ளனர். இந்த தகவலை பிஆர்எஸ் இந்தியா எனும் பொதுநல சட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 19 முதல் ஜுன் 1-ம் தேதி வரை என நாடு முழுவதிலும் 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இன்று ஜுன் 4-ல் வெளியாகிறது.

இந்த தேர்தலின் போட்டியாளர்கள் குறித்து பிஆர்எஸ் இந்தியா எனும் பொதுநல சட்ட அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. இதன் அறிக்கையின்படி, நாடு முழுவதிலும் 8,360 பேர் சுயேச்சை வேட்பாளர்களாகத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

கடைசியாக 1996 மக்களவை தேர்தலில் அதிகமாக 13,952 சுயேச்சைகள் போட்டியிட்டிருந்தனர். இவர்களது எண்ணிக்கை, 2019 மக்களவை தேர்தலில் 6,039 என்றிருந்தது.

2019-ஐ விட அதிகமாக இந்த முறை தேர்தலில் சுயேச்சைகள் 8,360 எண்ணிக்கையில் இருந்துள்ளனர். இவர்களுடன் 6 தேசியக் கட்சிகள் உள்ளிட்ட 744 அரசியல் கட்சிகள் நடப்பு தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

இவர்களில் அதிகமான வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்த தேசியக் கட்சியாகி விட்டது பகுஜன் சமாஜ். உபியின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் இக்கட்சியில் 488 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதன் அடுத்த நிலையில் தேசியக் கட்சியான பாஜகவில் 441 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதர தேசியக் கட்சிகளில் காங்கிரஸ் 328, சிபிஎம் 52, ஆம் ஆத்மி 22 வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்திருந்தது.

பிராந்திய மற்றும் மாநிலக் கட்சிகளில் சமாஜ்வாதி 71, திரிணமூல் காங்கிரஸ் 48 என அதிகமான வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. மற்ற மாநிலங்களின் கட்சிகளில் அதிமுக 36, சிபிஐ 30, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 25, ராஷ்டிரிய ஜனதா தளம் 24, திமுக 22 வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டனர்.

ஒரு தொகுதியில் 15 வேட்பாளர்கள்: இந்த எண்ணிக்கை சதவிகிதங்களில் சுயேட்சைகள் 47, தேசியக் கட்சிகள் 16 மற்றும் மாநில, பிராந்தியக் கட்சிகள் ஆறு எனவும் உள்ளன. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சராசரியாக தலா ஒரு தொகுதிக்கு 15 வேட்பாளர்கள் போட்டியில் இருந்துள்ளனர்.

கரூரில் 46 சுயேட்சைகள்: இந்த சராசரியான அதிகமாக 31 என தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட்டனர். தமிழ்நாட்டின் கரூர் தொகுதியில் மிக அதிகமாக 54 வேட்பாளர்கள் இடம் பெற்றனர். இந்த 54-ல் 46 பேர் சுயேட்சைகள் ஆவர்.

2 தொகுதிகளில் ராகுல்: நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்சிகளின் 347 எம்பிக்கள் மீண்டும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் ஒரு எம்பியான காங்கிரஸ் தலைவர் ராகுல் மட்டும் 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in