Published : 04 Jun 2024 06:35 AM
Last Updated : 04 Jun 2024 06:35 AM
நாக்பூர்: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் ரஷ்யாவின் ராணுவ தொழில் கூட்டமைப்பு (என்பிஓ) ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.
பிரம்மோஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலுள்ள ஏவுகணை மையத்தில் 4 ஆண்டாக பொறியாளராக பணியாற்றினார் நிஷாந்த் அகர்வால். ஏவுகணை தொழில்நுட்ப ரகசியங்களை பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு (ஐஎஸ்ஐ) வழங்கியதாக நிஷாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கடந்த 2018-ம்ஆண்டு நிஷாந்த் கைது செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அகர்வாலுக்கு மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கை விசாரித்த நாக்பூர் மாவட்ட நீதிமன்றம், நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. அத்துடன் அவருக்கு 14 ஆண்டு கடுங்காவல்தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அரசுதரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஜோதி வஜானி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT