

பெங்களூரு: பெங்களூருவில் 133 ஆண்டுகளுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு 111மி.மீ, மழை கொட்டி தீர்த்ததில் 200-க்கும் மேற்பட்ட மரங்கள், மின் கம்பங் கள் சாய்ந்தன.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
அப்போது, பலத்த காற்று வீசியதால் சாலையோரங்களில் இருந்த 206 மரங்கள் வேரோடு சாய்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் சாலைகளில் முறிந்து விழுந்தன.
118 மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் கம்பிகள் அறுந்து தொங்கின. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்களும், மாநகராட்சி ஊழியர்களும் நள்ளிரவு முதலே சாய்ந்தமரங்களையும், மின் கம்பங்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மைசூரு சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் மிதந்தவாறு பயணிக்கும் நிலை ஏற்பட்டது.
111 மி.மீட்டர் பதிவு: பெங்களூருவில் ஞாயிற்றுக் கிழமை அதிகபட்சமாக 111 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த அளவானது ஜூன் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாகும். கடந்த 1891-ம்ஆண்டு ஜூன் 16-ம் தேதி பெங்களூருவில் 101.6 மி.மீ. மழை பதிவானதே இதுவரை அதிகபட்ச அளவாக இருந்து வந்தது.
தற்போது 133 ஆண்டுகளுக்கு பின்னர் அதைவிட அதிக மழை நேற்று முன்தினம் பெய்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்கு பெங்களூருவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.