Last Updated : 06 Aug, 2014 08:36 AM

 

Published : 06 Aug 2014 08:36 AM
Last Updated : 06 Aug 2014 08:36 AM

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்பதில் சிக்கல்: ‘மகன் கிடைக்க மாட்டான்’ - சிறுவனின் தந்தை கண்ணீர் பேட்டி

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை காப்பாற்ற கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தனது மகன் உயிருடன் கிடைக்க வாய்ப்பில்லை என்றும், ஆழ்துளை கிணற்றை சுற்றியுள்ள பகுதியை தோண்டி நிலத்தை பாழாக்க வேண்டாம் என்றும் சிறுவனின் தந்தை கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

பாகல்கோட்டை மாவட்டம் பதாமி அருகே உள்ள சூலிகேரி கிராமத்தை சேர்ந்தவர் ஹனுமந்தப்பா ஹட்டி (34). இவரது 6 வயது மகன் திம்மண்ணா கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், 350 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். கடந்த 3 நாட்களாக பலத்த மழையையும் பொருட்படுத்தாது மீட்புப் பணிகள் நடைபெற்று வந்தபோதிலும், சிறுவனை மீட்க முடியவில்லை.

தோல்வியில் முடிந்த முயற்சிகள்

திம்மண்ணா ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு மணி நேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்த மண்டியா மீட்புப் படையினர், அவன் சுவாசிக்க வசதியாக குழாய் மூலம் ஆக்சிஜனை செலுத்தினர். அப்போது, சிறுவன் 160 அடி ஆழத் தில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து ஆழ் துளை கிணற்றை சுற்றி 'எல்' வடிவத்தில் ஜேசிபி, பொக்லைன் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் சுரங்கம் அமைக்கும் பணியை முடுக்கிவிட்டனர். செவ்வாய்க் கிழமை மாலை வரை 120 அடி வரை தோண்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே புனேவை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு படை யினர் கடந்த திங்கள்கிழமை ஆழ் துளை கிணற்றுக்குள் இரு அதி நவீன மைக்ரோ கேமராக்களை செலுத்தி, சிறுவனின் நிலையை கண்காணித்தனர். அப்போது கேமராவுடன் இணைக்கப்பட் டிருந்த லேப்டாப்பில் சிறுவனின் கை அசைவுகள் தெளிவாக தெரிந்தது.

இதையடுத்து பெல்லாரி மாவட்டம் மஞ்சேய் கவுடா என்பவர் தான் கண்டுபிடித்த ரோபோ கருவி மூலம் திம்மண்ணாவை மீட்க முயற்சித்தார். அவரைத் தொடர்ந்து புனேவை சேர்ந்த ஷாமிலி தன்னார்வத்தொண்டு நிறுவன பொறியாளர் பசவராஜ் ஹிரேமத் கயிறு மூலம் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

மணிகண்டனின் முயற்சி

இதனிடையே சிறுவனை மீட்க வருமாறு மதுரையை சேர்ந்த மணிகண்டனுக்கு பாகல்கோட்டை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது. அவர் தனது ரோபோவின் மூலம் சிறுவனை மீட்கும் பணியை செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கினார்.

சிறுவன் மீது மண் இருப்பதால், முதலில் அதை ரோபோவின் மூலம் அள்ளும் பணியில் ஈடுபட்டார். மண் முழுவதுமாக அகற்றப்பட்ட பின்பு, சிறுவனை மீட்க அவர் முயற்சி மேற்கொள்ளவுள்ளார்.

அமைச்சர் உத்தரவு

இதனிடையே சம்பவ இடத்தில் 3 நாட்களாக தங்கியிருக்கும் கர்நாடக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல், ஆழ்துளை கிணற்றை மூடாமல் அலட்சியமாக இருந்ததை கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால், சூலிகேரி பஞ்சாயத்து தலைவர் சவுகத் அலி, பஞ்சாயத்து பொறியாளர் ஆர்.கே.பாட்டீல் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறுவனின் தந்தை பேட்டி

சூலிகேரி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் திம்மண்ணா உயிருடன் திரும்ப வேண்டுமென அப்பகுதி மக்கள் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளை கிணற்றின் அருகில் அமர்ந்து, சிறுவனின் தாயார் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து வருகிறார்.

இதனிடையே செய்தியாளர் களிடம் பேசிய சிறுவனின் தந்தை ஹனுமந்தப்பா, ''என்னுடைய கரும்பு தோட்டத்தில் சாகுபடி செய்வதற்கு போதிய அளவு கிணற்றில் நீர் இல்லை. அதனால் கடந்த ஆண்டு ஒரு ஆழ்துளை கிணறு தோண்டினேன். அதில் சுத்தமாக நீர் வரவில்லை. எனவே 6 மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி, இந்த இடத்தில் 350 அடி ஆழத்திற்கு மீண்டும் ஆழ்துளை கிணறு தோண்டினேன். இதிலும் நீரில்லை. ஆழ்துளை கிணறு தோண்டவும், இருக்கும் கிணற்றை ஆழப்படுத்தவும் லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறேன். இதுமட்டுமில்லாமல் விவசாய தேவைகளுக்காக ஏற்கெனவே வாங்கிய கடன் வேறு இருக்கிறது.

இந்த நிலையில் என்னுடைய ஒரே மகன் ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான். அவன் விழுந்து 3 நாட்கள் ஆகிவிட்டதால் உயிரோடு இருப்பானா என்பது சந்தேகம்தான். அழுதாலும் புரண்டாலும் என் பிள்ளை மேலே எழுந்து வரமாட்டான். என்னுடைய கனவில் மண் விழுந்துவிட்டது.

3 நாட்களாக நடைபெறும் மீட்பு பணியால் எனது கரும்பு தோட்டத்தை எல்லா பக்கமும் குழி தோண்டியதில் நிலம் பாழாகிவிட்டது. ஏற்கனவே பட்ட ரூ.10 லட்சம் கடனை கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறேன். இப்போது தோண்டப்படும் குழியை மூடி, மீண்டும் நிலத்தை சீர்திருத்த பல லட்சங்கள் செலவாகும். இதையெல்லாம் தாங்கும் சக்தி எனக்கு இல்லை. எனவே நிலத்தை பாழாக்கி என் மகனை காப்பாற்ற வேண்டாம் என கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன். உயிரோடு இருக்கிற 2 மகள்களை கரை சேர்க்க இந்த நிலம் தான் இருக்கிறது. இதுவும் பாழாகிவிட்டால், குடும்பத்தோடு சாக வேண்டியதுதான் ” என்று கண்ணீர்மல்க தனது ஆதங்கதக்தை வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x