

தன்னை தினமும் கேலி கிண்டல் செய்த இளைஞனை இளம்பெண் ஒருவர் தைரியமாக துரத்தி சென்று பிடித்து முழங்கால் போட வைத்து உதைத்திருக்கிறார். இதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக்கில்,'பெண்களை சீண்டினால் இது தான் பாடம்' எனக் கூறி பதிவேற்றியுள்ளார்.
பெங்களூரில் உள்ள ஜெயநகரை சேர்ந்தவர் வீணா ஆஷியா. இவர் இப்பகுதியில் தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.அவரை தினமும் பின் தொடர்ந்து வந்து இளைஞர் தினமும் தொல்லை கொடுத்துள்ளார்.
தொடக்கத்தில் பிரச்சினை வேண்டாம் என வீணா ஒதுங்கி சென்றிருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வழக்கம் போல வீணா தனது தோழியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.வழக்கம் போல அந்த இளைஞரும்ம் அவரை சீண்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த வீணா அவரை சத்தமாக திட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் அவன் தனது முகத்தை மறைத்துக்கொண்டு பயந்து ஓடினான். அப்போதும் விடாமல் வீணா அவனை துரத்தி சென்று பிடித்து முழங்கால் போடச் சொல்லி, எட்டி உதைத்துள்ளார்.
மன்னிப்பு கேட்கும் வரை அவனை உதைத்த சம்பவத்தை வீணாவின் தோழி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
வீணாவிடம் அடி வாங்கிய இளைஞன் பயந்து ஓடி போய் தனது பைக்கில் தப்பி இருக்கிறார்.அவனது பைக் எண்ணை குறித்துக்கொண்ட அந்த பெண், அடுத்த 40 நிமிடத்தில் ஜெயநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று வீடியோவையும்,பைக் எண்ணையும் இணைத்து புகார் கொடுத்துள்ளார்.
வீடியோ பார்த்த போலீஸார் உடனடி யாக அந்த இளைஞன் மீது பெண்ணை அவமரியாதை செய்ததற்காகவும், கேலி கிண்டல் செய்து சீண்டியதற்காகவும் இந்திய தண்டனை சட்டம் 354 (பி) மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக வீணா தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,'தினமும் காலையில் என்னை சீண்டுபவனுக்கு,இன்று தக்கபாடம் புகட்டினேன். இனி பெண்களை சீண்டினால் இது தான் பாடம்'' என அந்த வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ கிடுகிடுவென நாடு முழுவதும் பரவி, பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் அந்த இளை ஞனின் பெயர் கே.ஆர்.சூர்ய பிரகாஷ்(30) .
அவன் பெங்களூரில் உள்ள பனசங் கரியில் வசித்து வருவதும், தனியார் நிறுவனத்தில் பணி யாற்றி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீ ஸார் கடந்த சனிக்கிழமை இரவு அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே தைரியமாக செயல்பட்ட வீணாவிற்கு பல்வேறு மகளிர் அமைப்புகளிடமும் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.
பெங்களூரில் உள்ள 'கித்தூர் ராணி சென்னம்மா' மகளிர் அமைப்பினர் செவ்வாய்க் கிழமை மாலை அவருக்கு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் வீணாவிற்கு வீரவாளும், மைசூர் தலைப்பாகையும் அணிவிக் கப்பட்டது.