Published : 03 Jun 2024 12:15 PM
Last Updated : 03 Jun 2024 12:15 PM
புதுடெல்லி: “மக்களவை தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி திருச்சி சிவா, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரும் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சோனியா காந்தி, “நாங்கள் பொறுமை காக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக தேர்தல் முடிவுகள் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். தேர்தல் முடிவுகள் இண்டியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்” என்று கூறினார்.
முன்னதாக, கருணாநிதி குறித்து பேசிய சோனியா காந்தி, “கருணாநிதியின் 100-வது ஆண்டு நிறைவு நாளில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. பல சந்தர்ப்பங்களில் அவரைச் சந்தித்து, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. அவரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த கொண்டாட்ட நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ள நிலையில், இண்டியா கூட்டணி இதனை எதிர்த்துள்ளது, மேலும் தங்கள் கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று இண்டியா கூட்டணி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
முன்னதாக , கருத்துக்கணிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இது பிரதமர் நரேந்திர மோடியின் கற்பனைக் கருத்துக் கணிப்பு. 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 272 என்ற பெரும்பான்மையை தாண்டி 295 இடங்களுக்கு மேல் இண்டியா கூட்டணி பெறும்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT