

புதுடெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப அலையை எவ்வாறு சமாளிப்பது மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் ரீமல் புயல் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ரீமல் புயலால் ஏற்பட்டசேதங்கள், உயிரிழப்புகள், நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக வீடு மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ரீமல் புயலால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான மிசோரம், அசாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா மாநிலங்களின் தற்போதைய நிலை குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது.
ரீமல் புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை மத்தியஅரசு தொடர்ந்து வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். மேலும், நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்கவும், மறுசீரமைப்புக்கு தேவையான உதவிகளை வழங்கவும் உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுரை வழங்கினார்.
நாட்டில் நிலவும் வெப்ப அலையை எப்படி சமாளிப்பது, பருவமழைக்கான தயார் நிலை குறித்தும் இந்த கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.
ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை தொடர வாய்ப்பு உள்ளதாகவும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை இயல்பைவிட அதிகமாகவும், தென் பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவாகவும் இருக்கும் என்று ஆய்வுக் கூட்டத்தின்போது பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்துகளை தடுப்பதற்கும், கையாள்வதற்கும் முறையான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனை மற்றும் பிற பொது இடங்களில் தீயணைப்பு தணிக்கை, மின்பாதுகாப்பு தணிக்கை தவறாமல் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி இந்தஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.