

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஹாவேரி மாவட்டம், ஹங்கல் நகரை சேர்ந்த சமூக ஆர்வலரான சித்தப்பா தொட்டசிக்கண்ணணவர் தனது திருமண அழைப்பிதழை வாக்காளர் அடையாள அட்டை போன்று அச்சிட்டுள்ளார்.
இவருக்கும் ராணேபென்னூருவை சேர்ந்த ஜோதி என்பவருக்கும் வரும் 27-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்காளர் அட்டை போன்ற அழைப்பிதழில் மணமக்களின் புகைப்படமும், வாக்காளர் பெயர் என்ற இடத்தில் இருவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டை எண் இருக்கும் இடத்தில் 'SJMRG27042018’ என்ற எண் உள்ளது. இது மணமக்களின் இனிஷியல் எழுத்துகளையும், அவர்களது திருமண நாளையும் குறிக்கிறது.
மேலும் “வாக்கு விலைமதிப்பற்றது. எனவே குடும்பத்துடன் வாக்களிக்க மறந்துவிடாதீர்” என்ற வாசகமும் அதில் உள்ளது. இந்த அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. மேலும் பாராட்டும் வாழ்த்துகளும் குவிகிறது.