Published : 07 Aug 2014 07:56 AM
Last Updated : 07 Aug 2014 07:56 AM

குடிசைப்பகுதிகளில் வசிப்போர் எண்ணிக்கை 1.31 கோடி அதிகரிப்பு: மக்களவையில் வெங்கய்ய நாயுடு தகவல்

நாடு முழுவதும் குடிசைப்பகுதி களில் வசிப்போரின் மக்கள் தொகை 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 1 கோடியே 31 லட்சம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு எழுத்துபூர்வ மாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: 2001-ம் ஆண்டு குடிசைப்பகுதிகளில் வசிப்போரின் எண்ணிக்கை 5,23,71,589 ஆக இருந்தது. இது, 2011-ம் ஆண்டு 6,54,94,604 ஆக அதிகரித்தது. 2001-ம் ஆண்டு குடிசைப்பகுதிகள் அதிகமுள்ள நகரங்களின் எண்ணிக்கை 1,743 ஆக இருந்தது. இது, 2011-ம் ஆண்டு 2,613 ஆக அதிகரித்தது.

குடிசைப்பகுதிகளில் வசிப் போரின் எண்ணிக்கை மகாராஷ் டிரா மாநிலத்தில் மிக அதிக அளவில் உள்ளது. இங்குள்ள குடிசைப்பகுதிகளில் 1 கோடியே 18 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.

முந்தைய ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தில் 1 கோடியே 1 லட்சம் பேரும், மேற்கு வங்கத்தில் 64 லட்சம் பேரும், உத்தரப் பிரதேசத்தில் 62 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 58 லட்சம் பேரும் குடிசைப்பகுதிகளில் வசிக்கின்றனர்.

மத்தியப் பிரதேசம் - 57 லட்சம் பேர், கர்நாடகா - 33 லட்சம், ராஜஸ்தான் - 21 லட்சம், சத்தீஸ்கர் - 19 லட்சம், டெல்லி - 18 லட்சம், குஜராத் - 17 லட்சம், ஹரியாணா - 16 லட்சம், ஒடிஸா - 15.60 லட்சம், பஞ்சாப் 14.60 லட்சம், ஜம்மு காஷ்மீர் 6.60 லட்சம் பேர் குடிசைப்பகுதிகளில் வசிக்கின்றனர்.

அதே 2001 2011 கால கட்டத் தில் குஜராத் மாநிலத்தில் குடிசைப் பகுதிகளில் வசிப்போரின் மக்கள்தொகையில் 2 லட்சத்து 95 ஆயிரம் பேர் குறைந்துள்ளனர். டெல்லியில் 2.40 லட்சம் பேர், மகாராஷ்டிராவில் 1.27 லட்சம் பேர், பஞ்சாபில் 23 ஆயிரம் பேர், ஹரியாணாவில் 18 ஆயிரம் பேர், சண்டிகரில் 11 ஆயிரம் பேர் குறைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x