இறுதிகட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 49.68% வாக்குப்பதிவு

இறுதிகட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 49.68% வாக்குப்பதிவு

Published on

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதி கட்டமாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.68% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக ஜார்க்கண்ட்டில் 60.14% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் சில வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை. மாலை 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விவரம்:

  • உத்தரப் பிரதேசம் - 46.83%
  • பஞ்சாப் - 46.38%
  • மேற்கு வங்கம் - 58.46%
  • பிஹார் - 42.95%
  • ஒடிசா - 49.77%
  • இமாச்சலப் பிரதேசம் - 58.41%
  • ஜார்க்கண்ட் - 60.14%
  • சண்டிகர் - 52.61%

மேற்கு வங்கத்தில் வன்முறை: மேற்கு வங்கத்தில் ஒரு சில பகுதிகளில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜாதவ்பூரில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (Indian Secular Front - ISF) கட்சி வேட்பாளரின் காரின் மீது நேற்று குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக இன்று வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துள்ளன. வன்முறைச் சம்பவங்கள் நடந்தாலும் கூட மேற்கு வங்கத்தில் வாக்குப் பதிவில் பெரிதாக பாதிப்பு இல்லை.

மேற்கு வங்கத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வன்முறைக் கும்பல் ஒன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரம், தேர்தலுக்கான ஆவணங்கள் என அனைத்தையும் சூறையாடி குளத்தில் வீசியது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்றைய தேர்தலில் பாஜக தலைவர் ஜெபி நட்டா, ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மற்றும் சரண் தொகுதி வேட்பாளர் ரோஹினி ஆச்சார்யா, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சட்டா, அவரது கூட்டாளியும் கிரிக்கெட் வீரருமான ஹர்பஜன் சிங், நடிகையும் மண்டி வேட்பாளருமான கங்கனா ரனாவத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in