Last Updated : 01 Jun, 2024 10:01 AM

1  

Published : 01 Jun 2024 10:01 AM
Last Updated : 01 Jun 2024 10:01 AM

இண்டியா கூட்டணியில் தனித்து நிற்கிறாரா மம்தா?- ஜுன்.4-க்குப் பின் இறுதி நிலைப்பாடு

புதுடெல்லி: இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், மறுப்பும் சொல்லாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, அக் கூட்டணியில் தனித்து நிற்பதாகக் கருதப்படுகிறது. ஜுன் 4 இல் வெளியாகும் தேர்தல் முடிவுகளுக்கு பின் அவரது இறுதி நிலைப்பாடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு (என்டிஏ) எதிராக துவக்கப்பட்டது இண்டியா கூட்டணி. சுமார் 28 உறுப்பினர்களில் ஒருவராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸும் (டிஎம்சி) உள்ளது.

எனினும், மக்களவை தேர்தல் துவங்கியது முதல் தலைவர் மம்தாவின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாகி வருகிறது. இன்று டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

இதனால், மம்தா ஜுன் 4 மக்களவை தேர்தல் முடிவுக்குப் பின் தன் இறுதி நிலைப்பாட்டை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முதல்வர் மம்தாவுக்கு துவக்கம் முதல் காங்கிரஸுடன் நட்பு வைக்க விரும்பவில்லை.

தம் தலைமையில் காங்கிரஸ் அல்லாத ஒரு எதிர்கட்சிகள் கூட்டணியை அமைக்க முதல்வர் மம்தா முயன்றார். இந்த முயற்சியை தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உதவியுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முறியடித்திருந்தார்.

இண்டியா கூட்டணியின் உறுப்பினர்களுடன் மக்களவைத் தேர்தலில் திரிணமூல் இணையவில்லை. காங்கிரஸும், இடதுசாரிகளும் இணைந்து, திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக போட்டியிடுகின்றனர்.

இதுபோன்ற சூழலை உணர்ந்த பாஜக, அதற்கேற்றவாறு முதல்வர் மம்தாவுடன் தனது செயல்பாடுகளை அரங்கேற்றி வருகிறது. இதற்கு உதாரணமாக, மேற்குவங்க மாநிலத்தின் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் திரிணமூல் வேட்பாளரான அபிஷேக் பானர்ஜியின் போட்டி சுட்டிக் காட்டப்படுகிறது.

முதல்வர் மம்தாவின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அபிஷேக்கை எதிர்க்க பாஜக வலுவான வேட்பாளரை நிறுத்தவில்லை என்ற பேச்சு உள்ளது. இதனால், அபிஷேக்கின் வெற்றி உறுதியாகி உள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் திரிணமூல் எம்.பி.க்கள் வட்டாரம் கூறும்போது, “துவக்கம் முதல் எங்கள் தலைவி, டெல்லியில் ஒரு கால், தம் மாநிலத்தில் மறு காலையும் பதித்து வருகிறார். இந்த நிலைப்பாட்டை தொடரவும் விரும்புகிறார்.

எனவே, எந்த ஒரு முடிவையும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே அவர் எடுப்பார் எனக் கருதுகிறோம். இதன் காரணமாகவே அவர் இன்றைய இண்டியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதற்கு ஏதுவாக இங்கு நடைபெறும் கடைசி கட்ட வாக்குப்பதிவு அமைந்து விட்டது.” எனத் தெரிவித்தனர்.

இண்டியா கூட்டணியுடன் அதிக நெருக்கம் காட்டாத முதல்வர் மம்தா, தனது பழைய நண்பனான என்டிஏவுடனும் நட்பு பாராட்டவில்லை. இது ‘என் வழி தனி வழி’ என்பது போல் உள்ளது. இதே நிலைப்பாட்டைத்தான் கடந்த பத்து ஆண்டுகளாக ஒடிசாவின் பிஜு ஜனதா தளமும், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் கடைப்பிடிக்கின்றன.

ஒடிசாவின் நவீன் பட்நாயக், ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டியின் இந்நிலைப்பாடு, ஜுன் 4 தேர்தல் முடிவுக்கு பிறகும் தொடரும் என்பதில் உறுதியில்லை. எனவே, இவர்களது வழியிலேயே முதல்வர் மம்தாவும் செல்வதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x