

போபால்: முஸ்லிம் மத இளைஞர் சபி கான் மற்றும் இந்து பெண் சரிகா சென் ஆகிய இருவரும், தாங்கள் திருமணம் செய்வதற்கு தங்கள் குடும்பத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்வதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
“நாங்கள் மதம் மாறாமல் திருமணம் செய்ய முடியும். இதன்படி, நாங்கள் மதம் மாறாமல் திருமணம் செய்து இணைந்து வாழ விரும்புகிறோம். ஆனால், எங்கள் குடும்பத்தினரின் எதிர்ப்பால் எங்களால் திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை. எனவே, திருமணத்தை முறையாக பதிவு செய்வதற்கு எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு பெண் வீட்டார், “குடும்பத்துக்கு சொந்தமான நகை, பணத்தை எடுத்துவிட்டு தங்கள் பெண் ஓடிவிட்டார்” என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இருதரப்பையும் விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அலுவாலியா, “இஸ்லாமிய சட்டப்படி, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண், சிலை அல்லது நெருப்பை வழிபடும் பெண்ணை திருமணம் செய்வது செல்லாது. சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டாலும் அந்தத் திருமணம் செல்லாததாகவே கருதப்படும். இந்தச் சூழலில், திருமணபதிவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க எந்த முகாந்திரமும் இல்லை” என்று கூறி அவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.