Last Updated : 19 Apr, 2018 06:35 PM

 

Published : 19 Apr 2018 06:35 PM
Last Updated : 19 Apr 2018 06:35 PM

கர்நாடக தேர்தலில் அதிமுக 2 தொகுதிகளில் போட்டி: புதிய நிர்வாகிகளும் நியமனம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தமிழர்கள் அதிகமாக வாழும் இரு தொகுதிகளில் அதிமுக போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 12-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் காங்கிரஸூக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே க‌டும் போட்டி நிலவி வருகிறது. அதே வேளையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த‌ திமுக‌, அதிமுக, விசிக ஆகிய கட்சிகளின் கர்நாடக நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கர்நாடக தேர்தல் குறித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ''கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெங்களூருவில் உள்ள காந்திநகர் மற்றும் கோலார் தங்கவயல் ஆகிய இரு தொகுதிகளில் அதிமுக சார்பாக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே போட்டியிட விரும்புவர்கள் கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளிக்கலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990-களில் அதிமுக போட்டியிட உள்ள காந்திநகர் தொகுதியில் முனியப்பாவும், கோலார் தங்கவயலில் பக்தவசலமும் ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அதன்பிறகு இதே தொகுதிகளில் அதிமுக பல முறை போட்டியிட்டு டெபாசிட் இழந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் போட்டியிடுவதாக அதிமுக அறிவித்துள்ளதால் அக்கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதே போல கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்த புகழேந்தி தற்போது டிடிவி தினகரன் அணியில் உள்ளார். எனவே அவருக்கு பதிலாக கர்நாடக மாநில அதிமுக செயலாளராக எம்.பி. யுவராஜ், இணைச் செயலாளராக எஸ்.டி. குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கெனவே பெங்களூர் மாவட்டச் செயலாளர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x