Last Updated : 10 Apr, 2018 04:39 PM

 

Published : 10 Apr 2018 04:39 PM
Last Updated : 10 Apr 2018 04:39 PM

பணக்காரக் கட்சியாக வலம் வருகிறது: கடந்த 2016 ஆண்டில் ரூ.1000 கோடி வருமானம் பார்த்த பாஜக

கடந்த 2016-17ம் நிதிஆண்டில் ரூ.1,034 கோடி வருமானம் ஈட்டி நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார கட்சியாக பாஜக வலம் வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் உள்ள 7 தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.ஆயிரத்து 559 கோடி என்றால், அதில் ஏறக்குறைய ரூ. 1,000 கோடி பாஜக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியைச் சேர்ந்த ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தேசிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வருமானவரி தாக்கலை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டு இருப்பதாவது:

கடந்த 2016-17ம் ஆண்டில் 7 தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.1,559.17 கோடியாகும். இதில் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.225.36 கோடியாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வருமானம் ரூ.2.08 கோடியாகும். மத்தியில் ஆளும் பாஜகவின் ஆண்டு வருமானம் ரூ.1,034.27 கோடியாகும்.

7 தேசிய கட்சிகளும் கடந்த 2016-17ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.1,288.26 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக பாஜக ரூ.710.05 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.321.66 கோடியும் செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. கடந்த 2015-16ம்ஆண்டு மற்றும் 2016-17ம் ஆண்டுகளுக்கு இடையே பாஜகவின் வருமானம் 82 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ரூ.570 கோடியாக இருந்த பாஜகவின் வருமானம், கடந்த 2016ம் ஆண்டில் ரூ.1,034 கோடியாக உயர்ந்துள்ளது.

அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் வருமானம் கடந்த இரு ஆண்டுகளில் 14 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு ரூ.261.56 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு ரூ.225 கோடியாக குறைந்துள்ளது.

கடந்த 2016-17ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் வருமானம் ரூ.173.58 கோடி என்று தெரிவிக்கப்பட்டு்ள்ளது. இதில் ரூ.51.83 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக 2016-17ம் ஆண்டில் தங்களுக்கு கிடைத்த வருமானத்தில் 96.41 சதவீதம், அதாவது, ரூ.997.12 கோடி நன்கொடை, மானியங்கள், தொண்டர்கள் பங்களிப்பு மூலம் கிடைத்தது எனத் தெரிவித்துள்ளது.

அதேபோல, கடந்த 2016-17ம் ஆண்டில் தேர்தல் பிரசாரம், தேர்தல் செலவுகளுக்காக ரூ.606.64 கோடியும், நிர்வாகரீதியாக ரூ.69.78 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி ரூ.149.65 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளநிலையில், அதில் ரூ.115.65 கோடி நிர்வாகக் காரங்களுக்காக செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x