

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. கடந்தஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் கேஜ்ரிவால் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 10–ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜூன் 2-ம்தேதி அவரை சிறைக்கு திரும்ப உத்தரவிட்டது. இந்நிலையில் மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவரது மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் மறுத்துவிட்டது. “ரெகுலர் ஜாமீன் கோரி சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுக கேஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் கேஜ்ரிவால் தரப்பில் ரெகுலர் ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனுவுக்குஜூன் 1-ல் பதில் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். பிறகு அமலாக்கத்துறை கூடுதல் அவகாசம் கோரியதால் ஜூன் 7-ம் தேதிக்குள்பதில் அளிக்க நீதிபதி அனுமதி அளித்தார். எனினும் இடைக்கால ஜாமீன் கோரி கேஜ்ரிவால் தாக்கல் செய்த மற்றொரு மனுவுக்கு சனிக்கிழமை பதில் அளிக்க நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார்.
சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மதுபான விற்பனையாளர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டு அதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் ஆதாயம் அடைந்ததாக குற்றம் சுமத்தி அமலாக்கத் துறையும் நிதி மோசடி வழக்கு பதிவு செய்தது.
தற்போது சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டிக்கும்படி சிபிஐ மனு தாக்கல் செய்தது. இந்த மனு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஜூலை 6-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.