

தேசக்கட்டுமானம் என்பது ஒரு மனிதனால் முடியாது. இதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் ஆகியவற்றின் பங்களிப்பும் தேவை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த இந்தியா என்ற க்ஷ்நோக்கில் அரசியல் ரீதியான பாகுபாடுகளுக்கு இடமில்லை. எனவே காங்கிரஸ் இல்லாத இந்தியா, ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியா போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் முறையற்றது என்றார் மோகன் பகவத்.
புனேயில் நூல் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசும்போது, “தேசக்கட்டுமானம் என்பது ஒரு தனிமனிதனின் பணியாக இருக்க முடியாது, அது உள்ளடக்கத்தன்மை கொண்டது, எனவே ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு அவசியம் தேவை.
காங்கிரஸ் இல்லாத இந்தியா போன்ற வாசகங்கள் அரசியல் கோஷங்களே. இது ஆர்.எஸ்.எஸ். அகராதியில் கிடையாது.
இல்லாத அல்லது விடுபட்ட என்ற அர்த்தத்தை அளிக்கும் ‘முக்த்’ என்ற வார்த்தை ஆர்.எஸ்.எஸ். வார்த்தைகளில் இல்லை. நாங்கள் யாரையும் புறந்தள்ளி ஒதுக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டோம்” என்றார்
அதாவது பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் மக்களவையில் ‘மகாத்மா காந்தியின் கனவான காங்கிரஸ் அற்ற இந்தியா’ என்பதை தான் நாடி வருவதாகத் தெரிவித்தார்.
அதே போல் இடதுசாரி அம்பேத்கர்வாதிகளும் ஆர்.எஸ்.எஸ். அல்லாத இந்தியா என்ற வாசகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் மோகன் பகவத் சூசகமாக பிரதமர் மோடி, அமித் ஷாவின் பிரச்சாரத்துக்கு பதில் கூறியுள்ளார், உள்ளடக்கத் தன்மை பற்றி பேசியுள்ளதால் முக்த் என்ற வார்த்தை தங்களிடம் இல்லை என்று கூறும்போது ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியா என்பது போன்ற பிரச்சாரமும் தவறானது என்று சுட்டினார்.
மோகன் பகவத் மேலும் கூறும்போது, “ஐரோப்பியர்கள் எதிர்க்கட்சியினரையும் தங்களுடன் அழைத்துச் செல்லும் கலையை கற்றுத் தேர்ந்துள்ளனர். தேசக்கட்டுமானத்தில் அனைவரையும் நாம் அழைத்துச் செல்ல வேண்டும். நம் சிந்தனைகள், கொள்கைகள் முரண்பாடுடையவை என்றாலும் தேசக்கட்டுமானம் என்பது உள்ளடக்கத் தன்மை கொண்டது. தன்னம்பிக்கையும் உடன்பாட்டு மனநிலையும் கொண்ட மனிதர்கள் நமக்குத் தேவை. இல்லையெனில் நாம் பிரிவினைக்கு இரையாகி விடுவோம்” என்றார்.
மேலும் இந்துத்துவாவின் சாராம்சம் ஒருவர் தன் சுயத்தின் மீதும், குடும்பத்தின் மீதும் நாட்டின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே என்றார் மோகன் பகவத்