Published : 30 May 2024 05:12 PM
Last Updated : 30 May 2024 05:12 PM

“மோடி பிரச்சாரத்தில் 421 முறை கோயில், மசூதிகள்; 224 முறை முஸ்லிம், மைனாரிட்டி சொற்கள்” - கார்கே பட்டியல்

செய்தியாளர் சந்திப்பில் மல்லிகார்ஜுன் கார்கே. உடன் ஜெயராம் ரமேஷ்.

புதுடெல்லி: “நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பணவீக்கம், வேலையின்மை குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, "‘காந்தி’ படத்தைப் பார்த்ததன் மூலமே உலகம் மகாத்மா காந்தியைப் பற்றி தெரிந்து கொண்டதாக நரேந்திர மோடி கூறினார். அவரது இந்த கருத்தைக் கேட்குமு்போது சிரிப்புதான் வருகிறது. ஒருவேளை காந்தியைப் பற்றி நரேந்திர மோடி படிக்காமல் இருந்திருக்கலாம். மகாத்மா காந்தியை உலகம் அறியும். உலகின் பல்வேறு இடங்களில் அவரது சிலைகள் உள்ளன.

மகாத்மா காந்தியைப் பற்றி நரேந்திர மோடிக்குத் தெரியவில்லை என்றால், அவருக்கு அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றியும் தெரியாது. மகாத்மா காந்தி அகிம்சையில் நம்பிக்கை கொண்டவர், அவர் யாரையும் வெறுக்கவில்லை. ஆனால் நரேந்திர மோடி வெறுப்பு பற்றி மட்டுமே பேசுகிறார், அவர் சொல்வதில் எல்லாம் வெறுப்பு தெரிகிறது.

காங்கிரஸ் எப்போதும் மக்களின் பிரச்சினைகளை மனதில் வைத்து செயல்படுகிறது. மன்மோகன் சிங் பிரதமராகவும், சோனியா காந்தி கட்சியின் தலைவராகவும் இருந்தபோது, ​​ஏழைகளுக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தோம். அவற்றால் ஏழைகள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் நரேந்திர மோடி, வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, அரசியலமைப்பு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பிரச்சினைகளை ஊக்குவித்தார். இப்பிரச்சினைகளுக்கு எதிராக நாங்கள் போராடினோம், அதற்கு பொதுமக்களின் முழு ஆதரவு கிடைத்தது. எனவே, ஜனநாயகத்தைக் காக்க அச்சமின்றி நிற்கும் எனது சகாக்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

நரேந்திர மோடி தனது 15 நாள் உரையில் 232 முறை காங்கிரஸ் பெயரை உச்சரித்தார். மோடி என்ற வார்த்தையை 758 முறை பயன்படுத்தியுள்ளார். இண்டியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி பற்றி 573 முறை பேசினார். ஆனால், பணவீக்கம் மற்றும் வேலையின்மை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

சமூகத்தை பிரிக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின்போது 421 முறை கோயில்கள், மசூதிகள் குறித்து பேசினார். முஸ்லிம்கள், மைனாரிட்டி போன்ற வார்த்தைகளை 224 முறை பயன்படுத்தியுள்ளார். ஆனால், இது குறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாபா சாகேப் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் தனது கடைசி உரையில், "மதத்தில் பக்தி என்பது ஆன்மாவின் இரட்சிப்புக்கான பாதையாக இருக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி அல்லது நாயக வழிபாடு என்பது சீரழிவுக்கான ஒரு உறுதியான பாதை. அது இறுதியில் சர்வாதிகாரத்தில்தான் முடிவடையும்" என்று சொன்னார். பிரதமர் தன்னை கடவுளின் அவதாரமாகக் கருதுகிறார். பாஜக தலைவர்களும் அவரை கடவுளின் வடிவம் என்று கூறி வருகின்றனர்.

புதிய மாற்று அரசு அமைவதற்கான ஆணையை நாட்டு மக்கள் ஜூன் 4-ம் தேதி வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இண்டியா கூட்டணி முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்கள் அரசு அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும். மோடியும், பிற முக்கிய பாஜக தலைவர்களும் மதம் மற்றும் பிளவு பிரச்சினைகளில் மக்களை தவறாக வழிநடத்த எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டனர்.

இருந்த போதிலும், மக்கள் திசைதிருப்பும் அரசியலை தவிர்த்து, தங்கள் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு வாக்களித்துள்ளனர். 18வது மக்களவைக்கான இந்தத் தேர்தல் நீண்ட காலத்திற்கு நினைவில் நிற்கும். இந்த தேர்தலில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சாதி, மதம், பிரதேசம், பாலினம், மொழி ஆகியவற்றை மறந்து ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற ஒன்றுபட்டனர்.

ஜூன் 4-க்குப் பிறகு, மோடி மற்றும் பாஜக தலைவர்களுக்கு மகாத்மா காந்தியைப் பற்றி தெரிந்துகொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். மகாத்மா காந்திஜியைப் பற்றி நரேந்திர மோடி முன்பே அறிந்திருந்தால் அவர் அரசியலமைப்பு, சுயராஜ்யம், அகிம்சை, வளர்ச்சி, ஏழைகள், தலித்துகள் மற்றும் இந்தியாவைப் பற்றி பேசியிருப்பார்.

இந்த முழுத் தேர்தலின் போதும், மோடி, மகாத்மா காந்தி மற்றும் இந்தியா மீதான தனது அறியாமையைத் தவிர வேறு எதையும் காட்டவில்லை. மோடிக்கும் உண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது கட்சி அகிம்சையை வெறுக்கிறது" என்று கார்கே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x