கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: இந்திய வானிலை மையம்

படம்: சுரேஷ், ஆலப்புழா
படம்: சுரேஷ், ஆலப்புழா
Updated on
1 min read

கொச்சி: மே 31-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக இன்று வியாழக்கிழமை கேரளாவில் பருவமழை தொடங்கியது.

கேரளாவில் பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி, வடக்கு நோக்கி நகரும். தொடர்ந்து ஜூலை 15 ஆம் தேதி வாக்கில் நாடு முழுவதும் பருவமழை பரவும். இந்த அறிகுறிகள் அனைத்தும் இன்றே தென்பட்டன. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (மே.30) வெளியிட்ட தனது பதிவில், “தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது. மேலும், பருவமழை வடக்கு நோக்கி நகர்ந்து வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு முன்னேறி வருகிறது. வடகிழக்கு பகுதிகளிலும் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களாக கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள 14 நிலையங்களில் 2.5 மிமீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன்-செப்டம்பர்) நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அளவு ரீதியாக, நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை நீண்ட கால சராசரியில் (எல்பிஏ) 106% ஆக இருக்கும். மாதிரிப் பிழை ± 4% ஆகும்.

தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளா பெறும் சராசரி மழை அளவு 2018.7 மிமீ ஆகும். தொடக்க மாதமான ஜூன் மாதத்தில் மட்டும் சராசரியாக 648.3 மிமீ மழைப்பொழிவு இருக்கும். ஜூலை மாதம் மிகவும் ஈரப்பதமான மாதமாகம் இருக்கும். ஜூலை மாதத்தில் சராசரியாக 653.4 மிமீ மழைப்பொழிவு இருக்கும். இந்த ஆண்டு இதனை தாண்டிய மழைப்பொழிவு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

ரீமல் புயலின் விளைவு: ரீமல் புயலின் தாக்கத்தால் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் வீசிய ரீமல் புயல், வங்காள விரிகுடாவில் பருவமழையை ஏற்படுத்தியுள்ளது. இது வடகிழக்கு பகுதியில் முன்கூட்டியே தொடங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

அருணாச்சல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, மிசோரம், மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வழக்கமாக ஜூன் 5ம் தேதி பருவமழை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in