

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி மாதிரி, ஆம் ஆத்மி கட்சியும் ஒரு குடும்பத்தால் நடத்தப்படுகிறது. தற்போது கேஜ்ரிவாலின் மனைவி முன்னணிக்கு வந்துள்ளார். ஒருவரால் சிறையில் இருந்து கொண்டு எப்படி ஆட்சி நடத்த முடியும்? இதைப் பார்த்து இந்திய அரசியல்சாசனத்தை உருவாக்கியவர்களின் ஆன்மாக்கள் அழுது கொண்டிருக்கும்.
ஊழல் வழக்கில் கேஜ்ரிவாலின் அமைச்சர்கள் சிறை சென்றபோது, அவர்களின் ராஜினாமாவை கேஜ்ரிவால் ஏற்றார். ஆனால், இவர் சிறையில் இருக்கும்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுக்கிறார். யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அவர் கீழ்நிலைக்கு சென்றுவிட்டார்.
நிதிமோசடி வழக்கில் சிக்கிய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதுக்கு முன்பே பதவியை ராஜினாமா செய்தார். கேஜ்ரிவால் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஊழலுக்கு எதிரான இயக்கம் நடத்தியபோது அவர் கூறியது எல்லாம் பொய்யாகிவிட்டன. அரசு பாதுகாப்பை ஏற்க மாட்டேன், அரசு மாளிகையில் குடியிருக்க மாட்டேன் என்றார். ஆனால், அனைத்தையும் ஏற்றார். அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என்று கூட முன்பு கூறினார்.
இறுதியில் தனது குரு அன்னா ஹசாரேவின் பேச்சையே அவர் கேட்கவில்லை. காங்கிரஸ் கட்சி போல், மேலிட கலாச்சாரம் இருக்காது என்றார். ஆனால், ஐஏஎஸ் அதிகாரியை வீட்டுக்கு வரவழைத்து மிரட்டுகிறார். இவரிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும். இவர் வரு மானவரித்துறை ஆணையராக இருந்தவர். ஆனால், அவரது நடத்தையை பாருங்கள்.
அவருக்கு பல கடுமையான நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அலுவலகத்துக்கு செல்ல கூடாது, கூட்டம் நடத்தக் கூடாது, கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அவர் என்ன மாதிரியான முதல்வர்? அவர் என்ன சொல்ல விரும்புகிறார்? மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவருக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு மோகன் யாதவ் கூறினார்.