Published : 13 Apr 2018 02:51 PM
Last Updated : 13 Apr 2018 02:51 PM

டீ, சமோசா சாப்பிட ரூ.1 கோடி செலவு செய்த முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகம்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அலுவலகம் கடந்த 3 ஆண்டுகளில் தேனீர் மற்றும் நொறுக்கு தீனிக்காக ஒரு கோடி ரூபாய் செலவு செய்துள்ள விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அரசின் அன்றாட செலவுகள் குறித்த விவரங்களை ஹேமந்த் சிங் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரி இருந்தார். அவருக்கு டெல்லி மாநில அரசு செலவு விவரங்களை அளித்துள்ளது.

அதில் வெளியாகியுள்ள தகவல் வருமாறு:

முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகத்தில் தேனீர் மற்றும் சமோசா உள்ளிட்ட நொறுக்கு தீனிக்காக மூன்றாண்டுகளில் ஒரு கோடியே 3 லட்சத்து 4 ஆயிரத்து 162 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2015 -16 நிதியாண்டில் 23.12 லட்சம் ரூபாயும், 2016 -17 நிதியாண்டில் 46.54 லட்சம் ரூபாயும், 2017 -18 நிதியாண்டில் 33.36 லட்சம் ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதில் டெல்லி தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் மற்றும் அவரது வீடுடன் உள்ள முகாம் அலுவலகங்களில் தேனீர் மற்றும் நொறுக்கு தீனிக்கு மொத்தமாக இந்த தொகை செலவழிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹேமந்த் சிங் கூறுகையில் ‘‘மக்களிடம் இருந்து பெறப்படும் வரிப்பணம் மக்களுக்காக மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும். அரசின் திட்டங்களுக்கு நிதி செலவழிப்பதில் தவறில்லை. அதேசமயம் முதல்வர் அலுவலகத்தில் தேனீருக்காக இவ்வளவு பெரிய தொகை செலவு செய்வதை ஏற்க முடியாது. டெல்லி அரசு வீண் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்’’ எனக் கூறினார்.

முன்னதாக, டெல்லியில் ஆம் ஆத்மி அரசு பதவியேற்ற ஓராண்டிலேயே, முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் நொறுக்கு தீனிக்காக ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் செலவு செய்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x