Published : 09 Apr 2018 08:16 AM
Last Updated : 09 Apr 2018 08:16 AM

அருணாச்சல் எல்லையில் அத்துமீறலா?: சீனா புகாரை நிராகரித்தது இந்தியா

அருணாச்சல் எல்லையில் அத்துமீறி இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர் என்று சீனா புகார் கூறியதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

அருணாச்சல் பிரதேச எல்லையில் உள்ளது அசபிலா. இது இந்திய எல்லைக்குட்பட்ட பகுதி. இங்கு இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எல்லையில் வழக்கமாக நடக்கும் இந்தியா - சீனா எல்லை அதிகாரிகள் கூட்டம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி அருணாச்சல் எல்லையில் உள்ள கிபிது பகுதியில் நடந்துள்ளது.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சீன ராணுவ அதிகாரிகள், அசபிலா பகுதியில் எல்லை மீறி இந்திய வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதாகப் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகாரை அந்தக் கூட்டத்திலேயே இந்திய ராணுவ அதிகாரிகள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர். இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் கூறும்போது, ‘‘அருணாச்சல் எல்லையில் அப்பர் சுபன்சிரி பகுதி இந்தியாவுக்கு உட்பட்டது. இங்கு அத்துமீறல் என்று சீனா கூறியது ஆச்சரியம் அளித்தது. அங்கு இந்திய வீரர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள அசபிலாவும் இந்தியாவுக்கு உட்பட்டதுதான். எனவே, சீன அதிகாரிகளின் புகாரை நாங்கள் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டோம்’’ என்றனர்.

அசபிலா பகுதியில் இந்திய வீரர்கள் அதிக எண்ணிக்கையில் குவித்திருப்பதாகவும் அதனால் இரு நாடுகளுக்கு இடையிலும் பதற்றம்தான் அதிகரிக்கும் என்றும் சீனா புகார் கூறியுள்ளது. அதற்கு இந்திய ராணுவ அதிகாரிகள் கூறும்போது, ‘‘எல்லையில் உண்மையான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை இந்திய வீரர்கள் நன்று அறிவார்கள். அந்த எல்லைக்குட்பட்டுதான் அவர்கள் ரோந்து செல்கின்றனர். மேலும் அந்தக் கூட்டத்தில், ‘அத்துமீறல்’ என்று சீனா கூறிய வார்த்தையையும் இந்திய அதிகாரிகள் முற்றிலும் நிராகரித்துள்ளனர்.

சிக்கிம் டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியை இந்தியா தடுத்து நிறுத்தியது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைதி திரும்பியது.

அருணாச்சலத்துக்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, தற்போது இந்தியா அத்துமீறல் என்று பொய் புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x