

தி அசோசியேஷன் ஃபார் டெமாக்ரட்டிக் ரிஃபார்மஸ் மற்றும் ஒடிசா எலெக்ஷன் வாட்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ள முடிவில் கூறியதாவது: ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை தேர்தலில் மட்டும் 1,283 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்த 1,283 வேட்பாளர்களில் 412 வேட்பாளர்கள் (32%) கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில் கோடீஸ்வர வேட்பாளர்களின் எண்ணிக்கை தற்போது 5% அதிகரித்துள்ளது.
இதில் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகம் என 128 பிஜு ஜனதா தளம் வேட்பாளர்கள், 96 பாஜக வேட்பாளர்கள், 88 காங்கிரஸ் வேட்பாளர்கள், 11 ஆம் ஆத்மி வேட்பாளர்கள் ஆகியோர் தங்களது சொத்து விவரம் தொடர்பான பிரமாண பத்திரம் மூலம் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களில் ரூ. 313.53 கோடி சொத்து மதிப்புடன் பணக்கார வேட்பாளராக ரூர்கேலா மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் திலீப் ரே உள்ளார். அவரை தொடர்ந்து ரூ.227.67 கோடியுடன் சம்பா தொகுதியின் பாஜக வேட்பாளர் சனாதன் மஹாகுட் இரண்டாம் இடம் வகிக்கிறார்.
மூன்றாவது இடத்தில் பஸ்தா தொகுதியின் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் சுபாஷினி ஜேனா ரூ.135.17 கோடியுடன் நிற்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.