

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் (51), தனது விசா நீட்டிப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
சுமார் 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் நீண்டகாலம் தங்கியிருக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்று தஸ்லிமா கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. தனது விசா காலத்தை ஓராண்டு நீட்டிப்பதற்கு தஸ்லிமா அண்மையில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் ஆகஸ்ட் 1 முதல், 2 மாதங்களுக்கு மட்டுமே அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விசா வழங்கியிருந்தது.
“இந்திய அரசின் இந்த முடிவு நான் கற்பனை செய்திராத ஒன்று” என தஸ்லிமா கூறினார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, “உங்களின் கடினமாக காலங்கள் விரைவில் முடிவுக்கு வரும்” என்று ராஜ்நாத் கூறியதாக தஸ்லிமா கூறினார்.
உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இது பற்றி கூறும்போது, “அவரது விண்ணப்பத்தை சரிபார்க்கும் பணிகள் முடிந்தபின், அரசு உரிய முடிவு எடுக்கும்” என்றார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமா, 1994-ல் தனது நாட்டை விட்டு வெளியேறினார். அவர் எழுதிய லஜ்ஜா என்ற நூலில் இஸ்லாமிய விரோத கருத்துகள் இருப்பதாக கூறி பழமைவாத முஸ்லிம் அமைப்புகள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தன. இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளாக அவர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் வசித்து வருகிறார். அவர் ஸ்வீடன் நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார்.
என்றாலும் அவர் நிரந்தரமாக இந்தியாவில், குறிப்பாக கொல்கத்தாவில் வசிக்கவே விரும்புகிறார். கடந்த 2004-ம் ஆண்டு முதல், அவர் தொடர்ந்து இந்திய விசா பெற்று வருகிறார்.