

10 ஆண்டுகளில் 22 பேரின் கடனை தள்ளுபடி செய்த பிரதமர் நரேந்திர மோடியால் இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி நிவாரணத்தை ஏன் தர முடியவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 1-ம் தேதி 7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இமாச்சலின் நஹானில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆப்பிள் விலையைக் கட்டுப்படுத்த அனைத்து தானிய, பழ, சேமிப்பு கிடங்கு வசதிகளையும் ஒருவரிடம் பிரதமர் மோடி ஒப்படைத்துவிட்டார். பிரதமர் மோடி பதவியேற்கும் போதெல்லாம் தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் விலை உயரும்.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வேளாண் விளைபொருட்களுக்கு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும். விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். ஏழைக் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு மேல் வரும் வரை ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
நாட்டில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்காக அரசு துறைகளில் காலியாக உள்ள 30லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். இமாச்சலில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளிலும் கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் 22 பேர் வாங்கியிருந்த ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள நிவாரணத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடியை அவரால் தர முடியவில்லை. மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில், இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில அரசையேகொள்ளையடிக்கப் பார்க்கிறார் பிரதமர்.
சிம்லாவில்தான் எனது சகோதரி பிரியங்கா வசிக்கிறார். ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் டெல்லியில் உங்கள் படை வீரர்களாக இருப்போம். ஏழை மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கு இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்