

திருப்பூரில் 3 குழந்தைகளை வீட்டு வளாகத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டார். இதில், 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை, கோயில்வழி புதுபிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (எ) சேகர். இவரது மனைவி ராஜேஸ்வரி (26). இவர்களுக்கு தருண் என்ற 3 வயது மகனும், கவின், கவி என்ற ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகளும் இருந்தனர். இவர்களுடன் ராஜேஸ்வரியின் தாய் ஜெயலட்சுமி இருந்துவந்துள்ளார். ஜெயலட்சுமி அப் பகுதியில் உள்ள ஒருவரிடம் ஏலச் சீட்டுக்கு சேர்ந்துள்ளார். அதில், மோசடி நடந்து, குடும்பத்தில் கடன் பிரச்சினை உருவானதாம். இதில், ராஜேஸ்வரிக்கும், ராஜசேகருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ராஜேஸ்வரி திங்கள்கிழமை மாலை 5 மணியளவில், தான் குடியிருக்கும் வளாகத்தில் உள்ள 8 அடி தண்ணீர் தொட்டிக்குள் தருண், கவின், கவி ஆகிய 3 குழந்தைகளையும் தூக்கிப் போட்டுவிட்டு, தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 3 வது குழந்தையை தொட்டிக்குள் போட்டு விட்டு, ராஜேஸ்வரி குதிக்கும் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 3 குழந்தைகளையும், ராஜேஸ்வரியையும் தண்ணீர் தொட்டியிலிருந்து மீட்டனர். தாய் உயிர் பிழைத்தார், 3 குழந்தைகளும் உயிரிழந்தன.
சம்பவ இடத்துக்கு வந்த ஊரக காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டி யன் தலைமையிலான போலீஸார், இறந்த குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.