Published : 26 May 2024 07:14 PM
Last Updated : 26 May 2024 07:14 PM

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டிப்பு

ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே

புதுடெல்லி: ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேயின் பதவிக் காலத்தை வரும் ஜூன் 30 வரை நீட்டித்து நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசின் முக்கியப் பதவிகளுக்கான நியமனங்களை முடிவு செய்யும் இந்தக் குழுவானது எடுத்துள்ள அரிதான முடிவு என அறியப்படுகிறது.

முன்னதாக கடந்த 1975 ஆம் ஆண்டு அப்போதைய ராணுவத் தளபதி ஜி.ஜி.பீவூருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளித்து இந்திரா காந்தி அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் தற்போது மனோஜ் பாண்டே பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மனோஜ் பாண்டே மே 31-ம் தேதியுடன் பணி ஓய்வுக்கான உச்ச வயது வரம்பை எட்டுகிறார். இந்நிலையில் அவருக்கு ஒரு மாதம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மனோஜ் பாண்டேவுக்குப் பின்னர் ராணுவத் தளபதியாகும் வாய்ப்புள்ள இரண்டு மூத்த ராணுவ அதிகாரிகளும் ஜூன் மாதம் பணி ஓய்வு வயதை எட்டும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 1975 ஆம் ஆண்டும் பீவாருக்குப் பின்னர் ராணுவத் தளபதியாகக் கூடிய அடுத்த தகுதியான நபர் ஓய்வுக்காலம் வரும் வரை பீவாரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. இப்போது மனோஜ் பாண்டே பதவிக் காலமும் அதே வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மனோஜ் பாண்டே கடந்துவந்த பாதை: இந்திய ராணுவத்தின் 29-வது ராணுவத் தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த மே 2022 ஆம் ஆண்டு பதவியேற்றார்.

அதற்கு முன், ஜெனரல் மனோஜ் பாண்டே துணை தளபதியாக இருந்தார். இவர் ராணுவத்தின் இன்ஜினீயர்ஸ் படை் பிரிவில் இருந்து ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற முதல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம், அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், 1982-ம்ஆண்டில் ராணுவத்தில் சேர்ந் தார். ஜம்மு காஷ்மீரில், ஆப்ரேஷன் பராகிரம் உட்பட பல முக்கிய நடவடிக்கைகளில் இவர் இன்ஜினீயர்ஸ் படைக்கு தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார்.

எல்லைகளில் பாதுகாப்பு சவால்களை இந்தியா சந்தித்து வரும் நிலையில், ஜெனரல் மனோஜ் பாண்டே ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x