Published : 26 May 2024 01:55 PM
Last Updated : 26 May 2024 01:55 PM

வங்கதேசம் - மே.வங்கம் இடையே கரையைக் கடக்கிறது ரீமல் புயல்: கொல்கத்தாவில் விமான சேவை ரத்து

கொல்கத்தா: வங்கக் கடலில் உருவான ரீமல் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மேற்கு வங்கம் - வங்கதேசத்துக்கு இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பருவத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் பருவமழைக்கு முந்தைய முதல் புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரீமல் என்றால் அரபி மொழியில் ‘மணல்’ என்று பொருள். ஓமன் நாடு இந்தப் பெயரை வைத்துள்ளது.

ரீமல் புயலால் மே 26, 27 ஆகிய தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், ரீமல் புயல் காரணமாக வடகிழக்கு இந்திய பகுதிகளில் மே 27, 28 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மழை: மேலும், தெற்கு 24 பர்கானாஸில் உள்ள பக்காலி, சாகர் தீவுகள் மற்றும் நாம்கானா உள்ளிட்ட மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புயல் கரையை நெருங்கும் நிலையில், கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்கிறது என்றும் கூறியுள்ளது.

7 கிமீ வேகத்தில் நகரும் புயல்: புயல் எச்சரிக்கை குறித்த வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை காலையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ரீமல் புயல் மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. காலை 8.30 மணி நிலவரப்படி, புயல் வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு தெற்கு - தென்மேற்கில் 260 கி.மீ., தொலைவிலும், மோங்கலாவுக்கு தெற்கே 310 கி.மீ., தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 240 கி.மீ., தொலைவிலும், கன்னிங்லிருந்து 280 கி.மீ., தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது.

எங்கே கரையைக் கடக்கிறது? ரீமல் புயல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்கதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையில் கரையைக் கடக்கும் என்றும் அப்போது அதன் வேகம் மணிக்கு, 110 - 120 கி.மீ, வேகத்தில் இருக்கும், காற்று மணிக்கு 135 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலை முன்னிட்டு மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் தெற்கு 24 பர்கானஸ் பகுதிகளுக்கு மே 26, 27 தேதிகளில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா, ஹவுரா, நாடியா மற்றும் புர்பா மேதினிபுர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்போது காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி.மீ., இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 26 மற்றும் 27 தேதிகளில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் NDRF: தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) 12 குழுக்களைத் தயார் நிலையில் நிலைநிறுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் புயல் கரையைக் கடப்பதை முன்னிட்டு மேலும் 5 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், பலவீனமான கட்டமைப்புகள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு, செப்பனிடப்படாத சாலைகள், பயிர்கள், பழத்தோட்டங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக மக்கள் வெளியே வரவேண்டாம் குறிப்பாக கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மறுபுறம் கடலோர மாவட்டங்களான பாலசோர், பாகராக் மற்றும் வடக்கு ஒடிசாவின் கேந்ரபாரா பகுதிகளுக்கு மே 26, 27 தேதிகளில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல் மே 27, 28ம் தேதிகளில் அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் மிக கன மழையும், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

மேற்கு வங்கத்தின் ஹல்தியா, ஃபர்சேர்கஞ்ச் மற்றும் ஒடிசாவின் பாராதிப், கோபால்புர் பகுதிகளில் 9 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலோர பகுதிகளில் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரீமல் புயல் காரணமாக கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து 21 மணி நேரத்துக்கு விமான சேவைகளை ரத்து செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். டைமண்ட் துறைமுகத்தில் படகு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

புயல் காரணமாக நகரின் சியாமா பிரசாத் மூகர்ஜீ துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணிவரை 12 மணி நேரத்துக்கு அனைத்து சரக்கு மற்றும் கண்டெய்னர் கையாளுவது நிறுத்தப்பட்டிருக்கும். மே 27ம் தேதி காலை வரை வடக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x