Published : 26 May 2024 10:21 AM
Last Updated : 26 May 2024 10:21 AM

குஜராத் - ராஜ்கோட் தீ விபத்து பலி 33 ஆக அதிகரிப்பு: நடந்தது என்ன?

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிறார் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்னிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதில், 9 பேர் 16 வயதுக்கு உட்பட்டோர் ஆவர்.

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் சிறார்களுக்கான விளையாட்டு பொழுது போக்கு மையம் உள்ளது. கோடை விடுமுறை என்பதால் அந்த மையத்தில் நேற்று ஏராளமான சிறுவர், சிறுமியர் குவிந்திருந்தனர். மாலையில் விளையாட்டு மையத்தின் தரைத்தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு மேற்கொண்டார்.

ராஜ்கோட் உட்பட 8 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ மளமளவென பரவி விளையாட்டு மையத்தின் 4-வது மாடி வரை கொழுந்துவிட்டு எரிந்தது. சுமார் 5 கி.மீ. தொலைவு வரை கரும்புகை சூழ்ந்தது. இந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 9 பேர் 16 வயதுக்கு உட்பட்டோர் ஆவர்.

இது குறித்து ராஜ்கோட் காவல் ஆணையர் ராஜு பார்கவா கூறும்போது, “டிஆர்பி பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதும் துரிதமாக மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த விபத்தில் பலர் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன. எனவே, மரபணு பரிசோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்படும்.

தீ விபத்து தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொழுது போக்கு மையத்தின் உரிமையாளர் யுவராஜ் சிங் ஜடேஜா தலைமறைவாகிவிட்டார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம். ராஜ்கோட் முழுவதும் பொழுதுபோக்கு மையங்களை மூட உத்தரவிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

முதல்வர் உத்தரவு: குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ராஜ்கோட்டில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு, நிவாரண பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். காயமடைந்தவர்களுக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் படேல் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி உள்ளார். தீ விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ராஜ்கோட் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x