

சிறந்த கதைப் பிரிவில் கர்நாடக அரசு தனக்கு அறிவித்த திரைப்பட விருதை,‘நான் எழுதாத கதைக்கு எனக்கு விருது தர வேண்டாம்' என கன்னட எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான பரகூர் ராமசந்திரப்பா வெளிப்படையாக அறிவித்துள்ளார். மிகவும் நேர்மையாக நடந்து கொண்ட அவருக்கு,பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும், கன்னட அமைப்புகளும் பாராட்டுகளை தெரிவித்துள்ளன.
2012-ம் ஆண்டுக்கான கர்நாடக அரசின் திரைப்பட விருது களை அம்மாநில செய்தி, மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் ரோஷன் பெய்க் கடந்த திங்கள் கிழமை அறிவித்தார். இதில் சிறந்த படமாக ‘தல்லனா' தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த நடிகர் விருது ‘கிராந்தி வீரா சங்கொலி ராயண்ணா' படத்தில் நடித்த நடிகர் தர்ஷனுக்கு அறவிக்கப்பட்டது. ‘தல்லனா' படத்தில் நடித்த நிர்மலா சென்னப்பா சிறந்த நடிகையாகவும், சிறந்த கதாசிரி யருக்கான விருது பரகூர் ராமசந்திரப்பாவிற்கு ‘அங்குலி மாலா’ படத்திற்காகவும் அறிவிக் கப்பட்டது. கர்நாடக அரசின் இந்த விருதை எழுத்தாளரும்,திரைப்பட இயக்குநருமான பரகூர் ராம சந்திரப்பா ஏற்க மறுத் துள்ளார்.
இது தொடர்பாக அவரிடம், ‘தி இந்து' சார்பாக பேசினோம்.
‘‘இந்தக் கதையை (அங்குலி மாலா) நான் எழுதவில்லை.அது ஒரு வரலாற்று புனைவு. இது தொடர்பாக பல்வேறு நபர்களிடம் நிறைய தகவல்களை பெற்றிருக்கிறேன். பல்வேறு நபர்களின் உழைப்பின் பயனாக கிடைத்த ‘அங்குலி மாலா' கதைக்கு, நான் உரிமைக் கொண்டாடக் கூடாது.
பல்வேறு வரலாற்று தரவுகளை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைத்தேன். இதில் என்னுடைய உழைப்பும் அறிவும் அடங்கி இருக்கிறது.
கதைக்கு எந்த விதத்திலும் நான் உரிமைக்கோர முடியாது. நான் எழுதாத கதைக்கு எனக்கு விருது வேண்டாம். அவ்வாறு விருது பெற்றால் நேர்மையாக இருக்காது. ஆதலால் தான் இந்த விருதை புறக்கணித்துள்ளேன்'' என்றார்.
எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப் பாவின் நேர்மையையும், வெளிப் படையான முடிவையும் பாராட்டி கன்னட திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் எழுத்தா ளர்களும் அவருக்கு வாழ்த்து களை தெரிவித்துள்ளனர்.
சிபாரிசு செய்து விருது பெறும் இக்காலத்தில், கிடைத்த விருதை புறக்கணிக்கும் பரகூர் ராமசந்திரப்பா எதிர்கால தலை முறையினருக்கு மிக சிறந்த உதாரணம் என பலர் கூறி யுள்ளனர்.
அஹிம்சையை போதிக்கும் அங்குலி மாலா
காட்டில் வாழும் ‘அங்குலி மாலா' என்ற அரக்கன், தனது எல்லையை விரிவாக்குவதற்காக கண்ணில் படுகிறவர்களை எல்லாம் கொலை செய்கின்றான்.
ஒரு நாள் காட்டுக்கு செல்லும் புத்தர், ‘வன்முறையை தவிர்த்து உயிர்களிடத்தில் அன்பும் கருணையும் காட்டுமாறு போதிக்கிறார்'. அதிலிருந்து அங்குலி மாலா அஹிம்சை முறையில் பயணிக்கிறான். இந்த வரலாற்று புனைவை எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப்பா இன்றைய காலத்திற்கேற்ப மாற்றி, ‘அங்குலி மாலா' என்ற பெயரிலேயே படமாக்கினார்.
தீவிரவாதத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை கொல்லும் வன்முறையை தவிர்த்து, அஹிம்சையின் பாதையில் மானுட வாழ்வில் அன்புடன் வாழ வேண்டும் என வலியுறுத்தினார். அதற்காகவே இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல காட்டில் வன்முறையாக வாழ்ந்த வால்மீகி, மனம் திருந்தி பின் ராமாயணம் எழுதியதாகக் கூறப்படுவதுண்டு.