Published : 25 May 2024 03:19 PM
Last Updated : 25 May 2024 03:19 PM

“இண்டியா கூட்டணியினர் வகுப்புவாதிகள், சாதிவெறியர்கள்...” - பிரதமர் மோடி கொந்தளிப்பு

பிரதமர் மோடி | இடம்: பாட்னா

பாட்னா: இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் ஆழமான வகுப்புவாதிகள், தீவிரமான சாதிவெறியர்கள், தங்கள் குடும்பத்துக்காக மட்டுமே பாடுபடக்கூடியவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போதே வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்லத் தொடங்கிவிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கான கருத்துக் கணிப்பாகவே இதைப் பார்க்கிறேன்.

இந்த தேர்தலில் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒருபுறம் உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கக் கூடிய நரேந்திர மோடி. மறுபுறம் உங்களிடம் பொய் சொல்லும் இண்டியா கூட்டணி. ஒருபுறம், 2047-க்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும் இலக்குடன் 24 மணி நேரமும் ஏழு நாட்களும் மும்முரமாக இருக்கும் மோடி. மறுபுறம், எந்த இலக்கும், எந்த வேலையும் இல்லாத இண்டியா கூட்டணி. இதனால்தான் இண்டியா கூட்டணி, மோடியை வசைபாடிக்கொண்டே இருக்கிறது.

எல்.ஈ.டி பல்புகளின் காலம் இது. ஆனால், பிஹாரில் சிலர் லாந்தர் விளக்கை (ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சின்னம்) கைகளில் வைத்துக்கொண்டு அலைகிறார்கள். அந்த விளக்கு ஒரு வீட்டுக்கு மட்டுமே (லாலு வீட்டுக்கு) ஒளி தரும். அந்த விளக்கு பிஹார் முழுவதையும் இருளில் தள்ளும்.

சமூக நீதிக்கான திசையை முழு நாட்டுக்கும் காட்டிய நிலம் பிஹார். எஸ்சி - எஸ்டி - ஓபிசிக்கான இடஒதுக்கீட்டு உரிமைக்காக பிஹாரில் நீண்ட போராட்டம் நடைபெற்றது. ஆனால், பிஹாரின் உணர்வுள்ள மக்களிடம் ஒரு கசப்பான உண்மையை வருத்தத்துடனும் மிகுந்த வேதனையுடனும் முன்வைக்கிறேன். இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்று அரசியல் சாசனம் கூறுகிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்று பாபா சாகேப் அம்பேத்கர் கூறி இருக்கிறார்.

ஆனால், ஆர்ஜேடி - காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள், எஸ்சி - எஸ்டி - ஓபிசி இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டு மத அடிப்படையில் தங்கள் வாக்கு வங்கிக்கு (இஸ்லாமியர்களுக்கு) இடஒதுக்கீடு கொடுக்க விரும்புகின்றன. இவர்களின் இந்த சதியை இந்த தேர்தலில் நான் அம்பலப்படுத்தியதை அடுத்து, இவர்களின் எஸ்சி - எஸ்டி - ஓபிசி இடஒதுக்கீடு எதிர்ப்புச் செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன.

தங்களின் வாக்கு வங்கியை மகிழ்விக்க, சிறுபான்மை நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தை ஒரே இரவில் மாற்றிய கட்சி காங்கிரஸ். இதையடுத்து, ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் சிறுபான்மை நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த நிறுவனங்களின் சேர்க்கையின் போது எஸ்சி - எஸ்டி - ஓபிசி இடஒதுக்கீட்டை முழுமையாக கடைப்பிடிக்கும் வழக்கம் முன்பு இருந்தது. ஆனால், ஆர்ஜேடி - காங்கிரஸ் காரணமாக, இன்று சிறுபான்மை நிறுவனங்களில் 1% இட ஒதுக்கீடு கூட எஸ்சி - எஸ்டி - ஓபிசியினர் பெறவில்லை. அதாவது, லட்சக்கணக்கான எஸ்சி - எஸ்டி - ஓபிசி இளைஞர்களின் கல்வி வாய்ப்புகள் இண்டியா கூட்டணியால் பறிக்கப்பட்டுள்ளன. ஓபிசி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் அழிக்கப்பட்டன.

இண்டியா கூட்டணியின் மற்றொரு சதியை கொல்கத்தா உயர் நீதிமன்றம் நாட்டின் முன் வெளிப்படுத்தியுள்ளது. இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள், மேற்கு வங்கத்தில் 77 முஸ்லிம் சாதிகளுக்கு ஓபிசி அந்தஸ்தை வழங்கினர். இண்டியா கூட்டணிக்காக வாக்கு ஜிகாத் நடத்தியவர்கள் அதன் மூலம் பலன் அடைந்தனர். அரசியல் சட்டத்தை மாற்றி நாடு முழுவதும் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க விரும்புவதை ஆர்ஜேடி - காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி மறுக்க முடியாது.

ஆனால், மோடி உயிருடன் இருக்கும் வரை எஸ்சி - எஸ்டி - ஓபிசி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்க நான் அனுமதிக்க மாட்டேன். பிஹாரில் உள்ள சமூக நீதியின் புனித பூமியிலிருந்து நாட்டுக்கும் பிஹாருக்கும் இன்று உத்தரவாதம் அளிக்கிறேன்.

இந்தத் தேர்தல் நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல். உங்கள் வாக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், உங்கள் வாக்கு பிரதமரைத் தேர்ந்தெடுக்கப் போகிறது. இந்தியாவுக்கு எப்படிப்பட்ட பிரதமர் தேவை? சக்தி வாய்ந்த இந்த நாட்டின் பலத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் பிரதமர் இந்தியாவுக்கு தேவை.

ஆனால், இண்டியா கூட்டணி 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆழமான வகுப்புவாதிகள், தீவிர சாதிவெறியர்கள், தங்கள் குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பாடுபடக்கூடியவர்கள். மற்றவர்களை அவர்கள் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள்" என்று பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x