ஒடிசாவில் தமிழர் வி.கே.பாண்டியன் செல்வாக்கால் எதிர்க்கட்சிகள் கலக்கம்
புவனேஸ்வர்: ஒடிசா அரசியல் வட்டாரத்தில் வி.கே. பாண்டியன் என்றழைக்கப்படும் கார்த்திகேய பாண்டியன் கடந்த 1974-ம் ஆண்டு மே 29-ம் தேதி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள கூத்தப்பன்பட்டி கிராமத்தில் பிறந்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நெய்வேலி விளையாட்டு விடுதியில் தங்கி படித்தார்.
மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் இளங்கலையும், டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை பட்டமும் பெற்றார். கடந்த 2000-ல் சிவில் சர்வீஸ் தேர்வில்வென்று பஞ்சாபில் ஐஏஎஸ் அதிகாரியானார்.
ஒடிசாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை திருமணம் செய்தார். இதன்பிறகு ஒடிசா மாநில ஐஏஎஸ் பணிக்கு மாறினார். கடந்த 2002-ம் ஆண்டில் ஒடிசாவின் தரம்கர் மாவட்ட உதவி ஆட்சியராக பதவியேற்றார். அப்போது விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலை திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தினார்.
கடந்த 2004-ம் ஆண்டில் ஒடிசாவின் ரூர்கேலா கூடுதல் ஆட்சியராக பதவியேற்றார். அப்போது 20 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்த ரூர்கேலா மேம்பாட்டு ஆணையத்தை 5 மாதங்களில் மீட்டெடுத்தார். கடந்த 2005-ம் ஆண்டில் மயூர்பஞ்சு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்க ஒற்றை சாளர முறையை அமல்படுத்தினார்.
கஞ்சம் மாவட்ட ஆட்சியராக அவர் பணியாற்றியபோது தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தினார். இந்ததிட்டத்தில் 1.2 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்குகளை தொடங்கி கொடுத்தார். இதன்மூலம் தொழிலாளர்களின் ஊதியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தினார். இதுவே நேரடி மானிய உதவித் திட்டத்துக்கு முன்னுதாரணமாக அமைந்தது.
கடந்த 2011-ம் ஆண்டில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக வி.கே.பாண்டியன் பதவியேற்றார். 2012-ம் ஆண்டு மே மாதம் முதல்வர் நவீன் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தார். அந்த நேரத்தில் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் பியாரிமோகன் மகாபோத்ரா, பிஜு ஜனதா தளஆட்சியை கவிழ்க்க சதி செய்தார். இந்த சதியை பாண்டியன் வெற்றிகரமாக முறியடித்தார். அப்போதுமுதல் நவீனின் வலதுகரமானார்.
பாண்டியனின் ஆலோசனையின்படி ஒடிசாவில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல் செய்யப்பட்டன. இதன் காரணமாக ஒரு காலத்தில் உணவுதானிய தட்டுப்பாடு நிலவிய ஒடிசா, தற்போது தேசிய அளவிலான உணவு தானிய உற்பத்தியில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர அரசியலில் பாண்டியன் களமிறங்கினார்.
தற்போது ஒடிசாவின் 21 மக்களவை தொகுதிகளுக்கும் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் பிஜு ஜனதா தளத்துக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 3-வதுஅணியாக காங். களத்தில் இருந்தாலும் அந்த கட்சியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இல்லை.
தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் அனைவரும் வி.கே. பாண்டியனை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒடிசாவில் வி.கே. பாண்டியனை குறிவைத்தே பிரச்சாரம் செய்கிறார்.
தமிழ்நாட்டை சேர்ந்த பாண்டியன், மண்ணின் மைந்தர் கிடையாது. ஒடிசாவை சேர்ந்தவரே மாநில அரசியலில் ஈடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அனைத்து விமர்சனங்களையும் நேர்மறையாகக் கையாளும் பாண்டியன், பிஜு ஜனதா தள ஆட்சியின் சாதனை பட்டியல்களை மட்டும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
ஒடிசாவின் தலைசிறந்த அரசியல் தலைவர்களைவிட, ஒடியா மொழியில் அவர் தெளிவாக, அழகாக பேசுகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மத்தியில் அவர் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார். இது எதிர்க்கட்சி தலைவர்களை கலக்கமடைய செய்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஒடிசா மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம், 12, பாஜக 8, காங்கிரஸ் ஓரிடத்தில் வெற்றி பெற்றது. அதே ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் 117, பாஜக 10, காங்கிரஸ் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். நவீன் பட்நாயக் 6-வது முறையாக முதல்வராக பதவியேற்பார் என்று வி.கே. பாண்டியன் உறுதிபட கூறி வருகிறார். முதல்வர் நவீனுக்கு வாரிசு இல்லாத சூழலில் பாண்டியனே அவரது அரசியல் வாரிசாக கருதப்படுகிறார். அசைக்க முடியாத ஆலமரமாக ஒடிசா அரசியலில் ஓங்கி வளர்ந்த அவர் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளார்.
