

சண்டிகர்: மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் 5 ஆண்டுகளில் 5 பேர் பிரதமராக இருப்பார்கள் என்று பாஜக கூறி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று சண்டிகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு மீண்டும் நிகழும். 2004-ல் பெற்றதை போன்று மக்களிடம் இருந்து தெளிவான மற்றும் தீர்க்கமான உத்தரவை ஜூன் 4-ல் (வாக்கு எண்ணிக்கை நாளில்) இண்டியா கூட்டணி பெறும்.
2004 பொதுத் தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என பாஜக பிரச்சாரம் செய்தது. என்றாலும் அக்கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தது.
இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்று கேட்பவர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். 2004-ல் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் பெயரை 3 நாட்களில் அறிவித்தோம். இம்முறை 3 நாட்கள் கூட ஆகாது. மேலும் 5 ஆண்டுகள் முழுவதும் ஒருவரே பிரதமராக இருப்பார். பிரதமரை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்வோம்.
நமது நாட்டில் தேர்தல் என்பதுகட்சிகளுக்கு இடையில் நடைபெறுகிறது. நமது ஜனநாயகம் கட்சியை மையமாக கொண்டது, நபர்களை மையமாகக் கொண்டது அல்ல. எனவே யார் பிரதமர் என்று கேட்பது தவறான கேள்வி. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.