Published : 25 May 2024 07:32 AM
Last Updated : 25 May 2024 07:32 AM

கேரளாவில் மீண்டும் பரவுகிறது பறவை காய்ச்சல்: பரிசோதனையில் உறுதி

கோப்புப்படம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகளிடம் மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த சில மாதங்களாக பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. அமெரிக்காவில் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இந்த காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.

இதை உறுதி செய்யும் வகையில் சில நாட்களுக்கு முன்பு கம்போடியாவில் ஒரு சிறுவன் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தான். அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் 2 பேருக்கும், ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவனுக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக பறவைக் காய்ச்சல் பரவலை தடுக்க உலக நாடுகள் அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கோட்டையத்தில் பாதிப்பு: கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆலப்புழா பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு ஏராளமான கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டன. இந்த சூழலில் தற்போது கேரளாவின் கோட்டயம் பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது.

கோழிகள் அழிப்பு: இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டயம் பகுதியில் ஏராளமான கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் வரும் 29-ம் தேதி வரை கோழி, வாத்து இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோட்டயம் மற்றும் அதனை சுற்றி 10 கி.மீ. தொலைவு பகுதிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

பறவைக் காய்ச்சல் குறித்து சர்வதேச சுகாதார நிபுணர்கள் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 888 மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட் டிருக்கிறது. இதில் 463 பேர் உயிரிழந்து உள்ளனர்.

எச்5என்1 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கோழி, வாத்து பண்ணைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கே பெரும்பாலும் பறவைக் காய்ச்சல் ஏற்படுகிறது. மேலும் எச்5என்1 வைரஸால் பாதிக்கப்பட்ட பறவைகளின் இறைச்சி, முட்டைகளை முறையாக வேக வைக்காமல் சாப்பிடுவோருக்கும் பறவைக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

பெருந்தொற்று அபாயம்: கரோனா வைரஸ் போன்று எச்5என்1 வைரஸும் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு சர்வதேச சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x