Published : 24 May 2024 06:05 AM
Last Updated : 24 May 2024 06:05 AM
புதுடெல்லி: முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணையை கட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்து உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி பாயும் பெரியாறு அரபிக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் நீரை கிழக்கு நோக்கி திருப்பி தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் பயன் அடைவதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1893-ம் ஆண்டில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு 15.5 டிஎம்சி ஆகும். இதன் உயரம் 155 அடி ஆகும். கேரளஎல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் அணை அமைந்துள்ளது. தமிழக பொதுப் பணித் துறை அணையை பராமரித்து வருகிறது.
இந்த சூழலில் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்றுகேரளா நீண்ட காலமாக கோரிக்கைவிடுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அணையின் உறுதித் தன்மையை உறுதி செய்தது.
எனினும் முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கடந்த 2021-ம் ஆண்டில் கேரளஅரசு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தது. தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பால் அப்போது புதிய அணைகட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரள அரசுதற்போது புதிதாக திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது. இதன்படி புதிய அணை கான்கிரீட் கலவையால் கட்டப்படும். அணையின் நீளம் 438 மீட்டர், உயரம் 53.63 மீட்டராக இருக்கும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 624.5 சதுர கி.மீ. ஆக இருக்கும் என்று திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கேரள அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
முல்லை பெரியாறு புதிய அணை தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தயார் செய்ய மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்து உள்ளோம். கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தோம். இந்த விண்ணப்பம் மே 28-ம் தேதி மதிப்பீட்டு குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
முல்லை பெரியாறு புதிய அணைதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை 10 பேர் அடங்கிய சிறப்புகுழு தயார் செய்துள்ளது. இதன்படி பழைய அணையை முழுமையாக இடித்துவிட்டு ரூ.1,300 கோடிமதிப்பீட்டில் புதிய அணை கட்டப்படும். அணை கட்டத் தொடங்கிய 5 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும்.
கடந்த 2011-ம் ஆண்டில் திட்டஅறிக்கையை தயார் செய்தபோதுஅணையின் கட்டுமான செலவுரூ.600 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது திட்ட செலவு ரூ.1,300 கோடியாக அதிகரித்துள்ளது. வண்டிப்பெரியாரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் புதிய அணையை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த அணை வெள்ளம், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் கட்டப்படும். தமிழ்நாட்டுக்கான நீர் தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT