

ஆந்திராவில் வர உள்ள புதியஅரசுடன் நல்லுறவை கடைபிடிப்போம் என நேற்று திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார்.
தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடந்த செவ்வாய்க் கிழமை இரவு தமது குடும்பத்தாருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தங்கும் விடுதிகளை ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர், நேற்று காலை ரேவந்த் ரெட்டியின் பேரனுக்கு தலைமுடி காணிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு விஐபி பிரேக் சமயத்தில் ஏழுமலையானை ரேவந்த் ரெட்டியும் அவருடன் வந்த அவரது குடும்பத்தாரும் தரிசிக்க சென்றனர்.
இவர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்தனர். அதன் பின்னர், கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான நிர்வாகஅதிகாரி தர்மாரெட்டி, தெலங்கானா முதல்வருக்கு தீர்த்த, பிரசாதங்களை வழங்கி கவுரவித்தார்.
அதன் பின்னர், கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் ரேவந்த் ரெட்டி பேசும்போது, ‘‘ஆந்திராவில் புதிய அரசுடன் சுமூக உறவு இருக்கும்படிபார்த்துக் கொள்வோம். தெலங்கானாவில் காங்கிரஸ் அரசுஏற்பட்ட பின்னர், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழையும் பெய்து வருவதால் தண்ணீர் பிரச்சினை இருக்காது. ஏழுமலையானின் கருணையால் தெலுங்கு மாநில மக்கள் மட்டுமின்றி நம் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டுமென சுவாமியை பிரார்த்தனை செய்தேன்’’ என்றார்.