Published : 23 May 2024 09:41 AM
Last Updated : 23 May 2024 09:41 AM

பிரியங்காவும், ராகுலும் காங்கிரஸின் சொத்துகள்: கார்கே பேச்சு

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: நாடு முழுவதும் பிரிவினையைத் தூண்டும் வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம், பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசி வருகிறார். இதை தலைமைத் தேர்தல் ஆணையம் கண்டிக்க வேண்டும்.

இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதுதான் இண்டியா கூட்டணியின் நோக்கம். இதற்காகத்தான் பல்வேறு மாநிலங்களில் குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கு ஒப்புக்கொண்டது. மாநிலங்களில் பலமாக உள்ள பிராந்தியக் கட்சிகளுக்கு அதிக வாய்ப்பளித்துள்ளோம். இதை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் தெரிந்துதான் செய்துள்ளது.

காங்கிரஸ் 328 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்த வியூகத்துக்கு கட்சியின் மேலிடம் முழு ஒப்புதலைக் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் நாங்கள் விரிவான ஆலோசனையை நடத்தியுள்ளோம். ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தி வதேராவும் காங்கிரஸ் கட்சியின் சொத்துகள். அவர்களை யாரும் கட்சியிலிருந்து பிரித்துப் பேச முடியாது.

ராகுல் காந்தி வயநாடு, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றால், எந்தத் தொகுதியை அவர் ராஜினாமா செய்வார் என்பது அவரது தனிப்பட்டவிருப்பம். கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகவே காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதால் இண்டியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று கூற முடியாது. அந்த மாநிலங்களில் பாஜக அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதால் அங்கு கூட்டணிக் கட்சிகளையே எதிர்த்துப் போட்டியிட முடிவு செய்தோம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான கூட்டணியை வைத்துள்ளோம். ஆனால், ஒட்டுமொத்தமாக பாஜகவின் சித்தாந்தங்களையும், பிரதமர் மோடியின் கொள்கைகளையும் நாங்கள் எதிர்த்துப் போராடுகிறோம். தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடாதது, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் இணைந்து எடுத்த முடிவாகும். இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x