அக்னிவீரர் திட்டத்தை ராணுவம் விரும்பவில்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அக்னிவீரர் திட்டத்தை ராணுவம் விரும்பவில்லை: ராகுல் காந்தி விமர்சனம்
Updated on
1 min read

அக்னிவீரர் திட்டத்தை ராணுவம் விரும்பவில்லை, மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அத்திட்டம் ரத்து செய்யப்பட்டு குப்பை தொட்டியில் போடப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

ஹரியாணா மாநிலம் மகேந்திரகர் நகரில் பிவாண்டி-மகேந்திரகர் காங்கிரஸ் வேட்பாளர் ராவ் தன் சிங்கை ஆதரித்து ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். தற்போதைய மக்களவைத் தேர்தலில் ஹரியாணாவில் ராகுல் காந்தி பங்கேற்ற முதல் கூட்டம் இதுவாகும்.

இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: அக்னி வீரர் திட்டம் பிரதமர் மோடியின் திட்டமாகும். இதனை ராணுவம் விரும்பவில்லை. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் நாங்கள் இத்திட்டத்தை குப்பைத் தொட்டியில் வீசுவோம்.

இந்தியாவின் எல்லைகள் நாட்டின் இளைஞர்களால் பாதுகாக்கப்படுகிறது. தேசப்பற்று நமது இளைஞர்களின் மரபணுவிலேயே உள்ளது. நமது நாட்டு வீரர்களை கூலித் தொழிலாளர்களாக மோடி மாற்றிவிட்டார்.

இரண்டு வகை தியாகிகள் இருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஒருவர் வழக்கமான ஜவான் அல்லது அதிகாரி. இவர் வழக்கமான ஓய்வூதியம், தியாகி அந்தஸ்து மற்றும் அனைத்து சலுகைகளையும் பெறக்கூடியவர்.

இதற்கு மாறாக ஏழைக் குடும்பத்தில் இருந்து வரும் ஒருவர் அக்னிவீரர் என்று குறிப்பிடப்படுகிறார். இவர்களுக்கு தியாகி அந்தஸ்தோ, ஓய்வூதியமோ, கேன்டீன் வசதியோ வழங்கப்படுவதில்லை.

22 தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஜூன் 4-ம் தேதி நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வோம். விவசாயக் கடன் தள்ளுபடியை பொறுத்தவரை கடன் தள்ளுபடி ஆணையத்தை நாங்கள் ஏற்படுத்துவோம். இவ்வாறு ராகுல் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in